முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி நீர் பங்கீட்டுக்கு 10 பேர் கொண்ட குழு: சுப்ரீம் கோர்ட்டில் வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது மத்திய அரசு

திங்கட்கிழமை, 14 மே 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. இந்த விவகாரத்தில் ஆணையமா ? குழுவா ? வாரியமா ? என்பதை நீதிமன்றமே அறிவுறுத்த வேண்டும் என்று மத்திய அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அவகாசம் வேண்டும்

காவிரி வழக்கின் இறுதித் தீர்ப்பு தொடர்பாக தமிழகம் உள்பட சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் ஆஜராகி, "வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய 10 நாள்கள் அவகாசம் வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். அதற்கான காரணங்களையும் எடுத்துரைத்தார்.

ஒப்புதலுக்காக...

இதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சேகர் நாப்தே, "செயல் திட்டத்தை உருவாக்காமல் திட்டமிட்டே மத்திய அரசு காலதாமதம் செய்து வருகிறது. நல்ல நிர்வாகம் குறித்து மத்திய அரசு பேசி வருகிறது. ஆனால், தமிழகத்துக்கு காவிரியிலிருந்து உரிய நீர் கிடைக்கவில்லை. காவிரி போன்ற தீவிரமான பிரச்னை குறித்து மத்திய அரசுக்கு அக்கறையில்லை' என்றார். இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை அடுத்து  மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் வரைவு செயல் திட்டம் தயாராக இருப்பதாகவும், விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

நேரில் ஆஜராக ...

இதையடுத்து நீதிபதிகள் வரைவு செயல் திட்டத்தைத் தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய நீர்வளம், நதிகள் மேம்பாடு, கங்கையை தூய்மைப்படுத்துதல் துறை செயலர், வரைவு செயல் திட்டத்துடன் நீதிமன்றத்தில் மே 14-ம் தேதி காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவித்தனர்.

அதன்படி நேற்று மத்திய அரசு சீலிட்ட கவரில் வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது. மத்திய நீர் வளத்துறை செயலாளர் யூ.பி சிங் சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜராகி வரைவு திட்டத்தை தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையை வரும் புதன் கிழமைக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒத்திவைத்தார்.

அரசிதழில் வெளியிட...

மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

உருவாக்கப்படும் நீர்ப் பங்கீட்டு அமைப்பு 10 பேர் கொண்டதாக இருக்கும். காவிரி நடுவர் மன்றம் கூறிய பணிகளை காவிரி அமைப்பு மேற்கொள்ளும் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒரு உறுப்பினர் காவிரி அமைப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி வாரியமா, குழுவா, ஆணையமா என்பது குறித்து சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்த வேண்டும். மத்திய அரசு அமைக்கும் காவிரி அமைப்பு தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டு அல்லது 65 வயதுவரை காவிரி அமைப்பின் தலைவர் பதவியில் நீடிப்பார். 10 பேர் கொண்ட நீர்ப் பங்கீட்டு அமைப்பில் யு.பி.சிங்கும் இடம்பெறுவார். 10 பேர் கொண்ட அமைப்பில் இருவர் முழுநேர உறுப்பினர்களாக செயல்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி வரைவு செயல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய பின் அரசிதழில் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து