முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் உண்மையானது: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லை - ஆட்சியமைக்க பா.ஜ.க. - காங்கிரஸ் இருதரப்புமே போட்டா போட்டி

செவ்வாய்க்கிழமை, 15 மே 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர் : நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவு நேற்று வெளியானது. இதில் பா.ஜ.க., காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் போன்ற எந்த கட்சிக்குமே தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டதை போலவே யாருக்கும் ஆட்சி அமைக்க தேவையான அறுதிப் பெரும்பான்மை இந்த தேர்தலில் கிடைக்கவில்லை. இருப்பினும், பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆகிய இரு தரப்பும் ஆட்சி அமைக்க போட்டா போட்டி போடுகின்றன. இரு தரப்பு தலைவர்களும் கர்நாடக கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளனர்.

வாக்குசேகரிப்பு

கர்நாடக சட்டமன்ற தேர்தல் கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான காங்கிரசும், எதிர்க்கட்சியாக இருந்த பாரதீய ஜனதாவும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கின. குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளமும் தேர்தல் களத்தில் குதித்தது. இதனால் இந்த தேர்தலில் மும்மனை போட்டி நிலவியது. பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்தார். மேலும், அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, ஸ்மிருதி இராணி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா போன்ற தலைவர்களும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக  வாக்குசேகரித்தனர்.

72 சதவீத வாக்குகள்

அதேபோல், மீண்டும் ஆட்சியை கைபற்றியே ஆக வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சி பிரசாரத்தில் ஈடுபட்டது. இதற்க்காக அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவரது அன்னையும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சோனியா காந்தியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க, காங்கிரஸ் இடையே பிரச்சாரத்தில் கடும் போட்டி நிலவியது. போதாக்குறைக்கு மதசார்பற்ற ஜனதா தள தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இப்படி கிட்டத்தட்ட 3 வாரம் நடைபெற்ற அனல் பறக்கும் பிரசாரம் கடந்த 10-ம் தேதி ஓய்ந்தது. மொத்தம் 222 சட்டமன்ற தொகுதிகளில் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் 72 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. தேர்தலில் நாங்களே வெற்றி பெறுவோம் என்று இருதரப்பினருமே மார்தட்டி வந்தனர். ஆனால் முன்னதாக இந்த தேர்தலில் தொங்கு சட்டசபைதான் அமையும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.

நிலைமை மாறியது

இந்நிலையில் நாடே ஆவலுடன் எதிர்பார்த்த கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கியதில் இருந்தே பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலன தொகுதிகளில் முன்னிலையில் இருந்தனர். இதனால் பாரதீய ஜனதா வெற்றி பெற்று விட்டதாகவும், எடியூரப்பாவே முதல்வராக போகிறார்  என்றும் முதலில் வந்த செய்திகள் தெரிவித்தன. எடியூரப்பாவுக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்துக்களை கூற தொடங்கினார்கள். ஆனால் பிற்பகலுக்கு பிறகு நிலைமை மாறியது. காங்கிரஸ் கட்சி முன்பு இருந்ததை விட அதிக இடங்களை கைப்பற்றியதாக செய்திகள் வரத் தொடங்கின.

பா.ஜ.க 104 இடங்கள்

இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் 2 தொகுதிகள் நீங்கலாக மீதமுள்ள 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த 222 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகளும் நேற்று மாலையில் அறிவிக்கப்பட்டன. அதன்படி, பாரதீய ஜனதா கட்சி 104 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 78 இடங்களையும், குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 38 இடங்களையும், சுயேட்சை வேட்பாளர்கள் 2 இடங்களையும் கைப்பற்றினர். 104 இடங்களை கைப்பற்றிய பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

கவர்னருடன் சந்திப்பு

கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க 112 இடங்கள் தேவை. அந்த மேஜிக் நம்பரான 112 தொகுதிகள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை இந்த தேர்தல் முடிவு நினைவூட்டியது. தனி மெஜாரிட்டி யாருக்குமே கிடைக்காத நிலையிலும் பா.ஜ.க., காங்கிரஸ் இரு தரப்பினருமே ஆட்சி அமைக்க வியூகம் வகுத்தனர். நேற்று மாலை மாநில கவர்னர் வஜூபாய் வாலாவை பா.ஜ.க. மூத்த தலைவர் எடியூரப்பா சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

குமாரசாமியும் சந்திப்பு

இந்த நிலையில் நேற்று திடீர் திருப்பமாக மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவளிக்க காங்கிரஸ் முடிவெடுத்தது. குறிப்பாக, பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவளிக்க காங்கிரஸ் முடிவெடுத்தது. இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, குமாரசாமியின் தந்தை தேவகவுடாவுடன் பேச்சு நடத்தினார். இறுதியில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் இணைந்து ஆட்சி அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. மேலும் குமாரசாமி முதல்வராகவும் காங்கிரஸ் ஒப்புக் கொண்டது. இதையடுத்து குமாரசாமியும் நேற்று மாலை கவர்னர் வஜூபாய் ரூடாபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

14 ஆண்டுகளுக்கு பிறகு...

எங்களுக்குள் கருத்து முரண்பாடு எதுவும் இல்லை. ஒருமித்த கருத்தோடு இருக்கிறோம் என்று காங்கிரஸ் மாநில தலைவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கடந்த 2004-ம் ஆண்டு இதே போன்ற ஒரு நிலை ஏற்பட்ட போது மதசார்பற்ற ஜனதா தளமும், காங்கிரசும் இணைந்து கூட்டணி அரசை அமைத்தன. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. குமாரசாமியை முதல்வராக்க காங்கிரஸ் மேலிடம் முழு மனதாக ஒப்புக் கொண்டுள்ளது. கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவும் உரிமை கோரியுள்ளார். குமாரசாமியும் உரிமை கோரியுள்ளார். இந்த இருவரில் யாரை கவர்னர் அழைக்கப் போகிறார் என்பது இன்று தெரியும்.

பிரதமர் மோடி நன்றி

இதற்கிடையில் டெல்லியில் இருந்து பா.ஜ.க. மூத்த அமைச்சர்கள் பெங்களூர் விரைந்தனர். இன்று அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பா.ஜ.க. சட்டமன்ற தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மேலும், பா.ஜ.க. மூத்த அமைச்சர்கள் புதிய அரசு அமைப்பது பற்றி மாநில தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர். இந்த நிலையில் தேர்தல் தோல்வியை அடுத்து அம்மாநில முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க கர்நாடக மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டோம் என்று அடிக்கடி வாய்கிழிய கத்தும் வட்டாள் நாகராஜ் இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து