முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவாஸ் ஷெரீபுக்கு எதிராக தேசத் துரோக வழக்கு பாக்.கில். 3 மாகாண சட்டசபைகளில் தீர்மானம்

புதன்கிழமை, 16 மே 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்: மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிய அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென, பாகிஸ்தானின் 3 மாகாண சட்டப்பேரவைகளில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதில், குறிப்பாக பஞ்சாப் மாகாண பேரவையில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான்-இ-இன்சாப் கட்சி கொண்டு வந்த தீர்மானத்தில், "இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து, துரோகியாகி இருக்கும் நவாஸ் ஷெரீபை தூக்கிலிட வேண்டும்' என்று கோரப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானங்கள் தவிர, தேசத் துரோக குற்றத்தின் கீழ் நவாஸ் ஷெரீபுக்கு எதிராக வழக்குப் பதியக் கோரி லாகூர் உயர் நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும், அதே குற்றச்சாட்டின் கீழ் நவாஸ் ஷெரீப் மீது வழக்குப் பதிய லாகூர் காவல் நிலையங்களில் இரு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

நவாஸ் ஷெரீப், கடந்த வாரம் "டான்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், 2008-ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக சூசகமாகத் தெரிவித்ததுடன், பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் சுதந்திரமாகச் செயல்படுவதாக ஒப்புக் கொண்டார்.

அவரது அந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. நவாஸ் ஷெரீப் கருத்து முற்றிலும் தவறானது என பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு கமிட்டி (என்எஸ்சி) கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், நவாஸ் ஷெரீபுக்கு எதிராக தேசத் துரோக வழக்குப் பதிய பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்து, கைபர் பக்துங்கவா ஆகிய மாகாணங்களில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஷெரீப் மறுப்பு:
இதனிடையே, பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கமிட்டி தன் மீது தெரிவித்த கண்டனத்துக்கு நவாஸ் ஷெரீப் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், உண்மையில் யார் தேசத் துரோகத்தில் ஈடுபட்டது என்பதை விசாரிக்க தேசிய ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இதனிடையே, நவாஸ் ஷெரீபின் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து