5 ஆண்டுக்குப் பின் மீண்டும் பாரதீய ஜனதா ஆட்சி கர்நாடக புதிய முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார் விவசாய கடன் தள்ளுபடி என அறிவிப்பு

வியாழக்கிழமை, 17 மே 2018      இந்தியா
yeddyurappa 2018 05 17

புதுடெல்லி: கர்நாடக முதல்வராக எடியூரப்பா நேற்று காலை 9 மணிக்கு பதவியேற்றுக் கொண்டார். கவர்னர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் கவர்னர் வஜுபாய் வாலா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கர்நாடகத்தில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. ரூ. ஒரு லட்சம் வரையிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான ஆணையில் முதல்வர் எடியூரப்பா முதல் கையெழுத்திட்டார்.

23-வது முதல்வர்
கர்நாடகத்தின் 23-ஆவது முதல்வராகி உள்ளார் எடியூரப்பா. 2007 மற்றும் 2008-க்குப் பிறகு தற்போது மீண்டும் 3-ஆவது முறையாக எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் தற்போதைக்கு எடியூரப்பா மட்டுமே முதல்வராகப் பதவியேற்றுள்ளார். பதவியேற்பு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜாவடேகர், ஜெ.பி. நட்டா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

15 நாள் அவகாசம்
ஆட்சி அமைக்க பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) - காங்கிரஸ் கூட்டணி என இரு தரப்பும் உரிமை கோரியிருந்த நிலையில், 104 எம்எல்ஏக்களை வைத்துள்ள பாஜகவை ஆளுநர் வஜுபாய் வாலா ஆட்சி அமைக்க அழைத்தார். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமும் அளித்துள்ளார் கவர்னர்.


கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 104 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 78 இடங்களிலும், ம.ஜ.த 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஓரிடம் கிடைத்துள்ளது. இதுதவிர சுயேச்சை உள்ளிட்ட 2 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 104 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ள பா.ஜ.க, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கவர்னரை சந்தித்து உரிமை கோரியது.

காங்கிரஸ் - ம.ஜ.த. கட்சிகள் கூட்டணி அமைத்து தங்கள் கூட்டணிக்கே பெரும்பான்மை இருப்பதாக கூறி தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்றும் கவர்னரிடம் உரிமை கோரியது. இதையடுத்து சட்ட நிபுணர்களுடன் சட்ட ஆலோசனை செய்த கவர்னர் வாஜூபாய் வாலா, பா.ஜ.க.வைச் சேர்ந்த எடியூரப்பாவுக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். அதை தொடர்ந்து நேற்று எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

விவசாய கடன் தள்ளுபடி
கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பா, தலைமைச் செயலகத்தில் வந்து முதல்வர் பணிகளைத் தொடங்கினார். அப்போது, விவசாயிகள் பெற்ற தனி நபர் கடனில் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சம் வரையிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாகவும், இந்த வகையில், கர்நாடகாவில் விவசாயிகள் பெற்ற ரூ.56 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து