ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இன்று 122-வது மலர்கண்காட்சி முதல்வர் இ.பி.எஸ் தொடங்கி வைத்து ரூ.1879.59 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

வியாழக்கிழமை, 17 மே 2018      தமிழகம்
Flower show 2018 05 17

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இன்று 122-வது மலர்கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்து ரூ.1879.59 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இன்று(18-ம் தேதி) 122-வது மலர்காட்சி தொடங்குகிறது. காலை 9 மணிக்கு நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இக்கண்காட்சியினை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து அங்கு காட்சி மேடையில் 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள லில்லியம், பிளாக்ஸி, டேலியா, பால்சம் போன்ற 185 வகையான மலர்கள் பூத்துக் குலுங்குவதை முதல்வர் பார்வையிடுகிறார். அதன் பின்னர் ஒரு லட்சம் மலர்களைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ள 60 அடி நீளமும், 20 அடி உயரமும் கொண்ட மேட்டூர் அணையின் வடிவமைப்பையும்,  தனியார் மற்றும் அரசுத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அரங்குகளையும் முதல்வர் பார்வையிடுகிறார்.

அதனைத்தொடர்ந்து நடைபெறும் விழா மேடையில்  தமிழக முதல்வர்  எடப்பாடி கே.பழனிச்சாமி ரூ.1850 கோடி மதிப்பீட்டில் குந்தா நீரேற்று புனல் மின்திட்டப் பணியினை திறந்து வைத்தும், ரூ.7.49 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 7 திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ.10.85 கோடி மதிப்பீட்டில் 5 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தும், 1577 பயனாளிகளுக்கு ரூ.11.25 கோடி மதிப்பீட்டில் பல்வேறு துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.


இந்த விழாவில் தமிழக வேளாண்மைத்துறை இரா.துரைக்கண்ணு தலைமை தாங்கி பேசுகிறார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்து பேசுகின்றனர். வேளாண்துறை முதன்மைச் செயலர் ககன்தீப் சிங் பேடி திட்ட விளக்கவுரையாற்றுகிறார். எரிசக்தித்துறை முதன்மை செயலர் விக்ரம் கபூர் சிறப்புரையாற்றுகிறார். மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வரவேற்புரையாற்றுகிறார்.

விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுணன், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.கணேஷ்(ஊட்டி), சாந்தி அ.ராமு(குன்னூர்), மு.திராவிடமணி(கூடலூர்), தமிழ்நாடு பால் உற்பத்தாயளர் இணைய தலைவர் அ.மில்லர், சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் அமர் குஷ்வாஹா, காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா, நீர்மின் திட்ட தலைமை பொறியாளர் சு.விவேகானந்தம், மாவட்ட வருவாய் அலுவலர் பி.செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். முடிவில் தோட்டக்கலைத்துறை இயக்குநர் டாக்டர் என்.சுப்பையன் நன்றி கூறுகிறார்.

விழாவில் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், அரசுத்துறை உயர் அலுவலர்கள், அ.தி.மு.க., நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து