முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய உலகக்கோப்பை: கால் பதித்த அணிகள் கால்பந்தில் சாதிக்குமா?

வியாழக்கிழமை, 17 மே 2018      விளையாட்டு
Image Unavailable

மாஸ்கோ : 2018-ம் ஆண்டின் ரஷ்ய உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் வரும் ஜூன் மாதம் 14-ம் தேதி தொடங்கி ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.1930-ம் ஆண்டு தொடங்கி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் உலகளவில் அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதில்  கால்பந்து வரலாற்றில் ஐஸ்லாந்து மற்றும் பனாமா ஆகிய. இரு அணிகளும் முதன்முறையாக உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு முதன்முறையாக தகுதிபெற்றுள்ள ஐஸ்லாந்து அணி, உலகக்கோப்பைக்கு தகுதி பெறும் சிறிய நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே சுமார் 3,50,000 தான். முன்னதாக, சுமார் 13 லட்சம் மக்கள் தொகையை கொண்ட டிரினாட் டொபாகோ அணியே உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற மிகச் சிறிய கால்பந்து அணி என்ற பெருமையை பெற்றிருந்தது. தகுதிச்சுற்றில் 10 போட்டிகளில் விளையாடிய ஐஸ்லாந்து அணி 22 புள்ளிகள் பெற்று உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது.

உலகக்கோப்பை போட்டியில் இந்த அணி குரூப் டி-யில் அர்ஜென்டினா, குரோஷியா மற்றும் நைஜீரியா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இதில், பலம் வாய்ந்த அர்ஜென்டினாவுடனான போட்டி ஐஸ்லாந்துக்கு மிகவும் கடினமாக இருக்கும். இந்த பிரிவின் மற்ற இரு அணிகள் ஐஸ்லாந்துக்கு கடினமாக இல்லாவிட்டாலும் சவாலான அணியாக திகழலாம்.

இந்த அணியின் பயிற்சியாளர் ஹெய்மிர் ஹால்கிரிம்சன் பல் மருத்துவராக இருப்பவர். இவரது பயிற்சியின் கீழ் தான் அந்த அணி உலகக்கோப்பைக்கு தகுதிபெற்றது. இதே வேகத்தில் அந்த அணி உலகக்கோப்பையிலும் நாக் அவுட் சுற்றுகளுக்கு தகுதி பெற்று சாதனை படைக்கும் முனைப்பில் களமிறங்குகிறது. ஜூன் 16-ம் தேதி முதல் போட்டி அர்ஜென்டினாவுடனும், 2வது போட்டி 22-ம் தேதி  நைஜீரியாவுடனும், 3வது போட்டி 26-ம் தேதி குரோஷியாவுடனும் நடக்கிறது.

இந்த உலகக்கோப்பை தொடரில் அறிமுக அணியாக களமிறங்கும் 2-வது அணி பனாமா. பல ஆண்டு கால முயற்சிகளுக்குப் பிறகு முதன்முறையாக பிபா உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது பனாமா அணி. மத்திய அமெரிக்க நாடான பனாமா தகுதிச்சுற்று போட்டியில் கோஸ்டா ரிகாவுக்கு எதிரான போட்டி ஒன்றில் 2-1 என வெற்றி பெற்று உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது.

பனாமா அணி உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றதை அடுத்து அந்த நாடு அதனை கொண்டாடும் வகையில் தேசிய விடுமுறை அறிவித்தது. இந்த அணியின் நுழைவு காரணம், அமெரிக்காவால் 1986-க்கு பிறகு முதன்முறையாக உலகக்கோப்பைக்கு தகுதிபெற முடியாமல் போனது.

உலகக்கோப்பை கால்பந்தில் முதல் போட்டியில் ஜூன் மாதம் 16-ம் தேதி பனாமா அணி பெல்ஜியத்துடனும், 2-ம் போட்டியில் 24-ம் தேதி இங்கிலாந்துடனும், 3-வது போட்டியில் 28-ம் தேதி துனிஷியாவுடனும்  ஜி குரூப்பில் இடம்பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து