முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி பிரச்சினையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி மத்திய அரசின் வரைவு திட்டத்தை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது அரசிதழில் உடனே வெளியிடவும் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 18 மே 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: மத்திய அரசின் திருத்தப்பட்ட காவிரி வரைவு செயல் திட்டத்தை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட், பருவகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே (ஜூன் மாதம்) வரைவு திட்டத்தை செயலாக்கத்துக்கு கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் இத்துடன் முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்.  காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டிருப்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதப்படுகிறது.

2007-ல் காவிரி நடுவர் மன்றம் தமிழகத்திற்கு 192 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து 4 மாநிலங்கள் மேல்முறையீடு செய்திருந்தன. 192 டி.எம்.சி. நீர் ஒதுக்கியது போதாது எனத் தமிழகம் மேல்முறையீடு செய்திருந்தது. தமிழகத்திற்கான காவிரி நீரை 132 டி.எம்.சி-யாக குறைக்க வேண்டும் என்று கோரி கர்நாடகம் மேல்முறையீடு செய்திருந்தது.

தமிழகத்திற்கு தண்ணீர் குறைப்பு
இந்த வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் தமிழகத்திற்கு வரும் காவிரி நீரை 192 டி.எம்.சி. லிருந்து 177.25 டி.எம்.சி-யாக குறைத்து உத்தரவிட்டது. அதாவது 14.75 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு குறைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதே வேளையில் கர்நாடகத்துக்கு 284.75 டி.எம்.சி. நீரும், கேரளாவுக்கு 30 டி.எம்.சி நீரும், புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி நீரும் வழங்க வேண்டும். இந்தத் தீர்ப்பை செயல்படுத்த ஸ்கீம் எனச் சொல்லப்படும் வரைவு செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என்றும் கடந்த பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து இருந்தது.

மத்திய அரசு மெத்தனம்
மேலும் இறுதித் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய நீர்வளத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு இந்த விஷயத்தில் மெத்தனமாக இருந்து கிட்டத்தட்ட 3 முறை அவகாசம் கேட்டது. கிட்டத்தட்ட 6 வாரங்களுக்கு பிறகு ஸ்கீம் என்றால் என்ன என்று நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டது மத்திய அரசு. அதற்கு சுப்ரீம் கோர்ட்டும் விளக்கமளித்து விட்டு இறுதியாக 4-வது முறையும் மத்திய அரசுக்கு கெடு விதித்தது. இதையடுத்து மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் கடந்த 14-ம் தேதி 14 பக்க வரைவு செயல் திட்டத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையைப் படித்து 4 மாநிலங்களும் அதில் பல்வேறு திருத்தங்கள் செய்யக் கோரி இருந்தன.

குறிப்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவுகளை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை என்றால் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கலாம் என்ற அம்சத்தைத் திருத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து அதைத் திருத்தி நீர்வளத்துறை செயலாளர் மீண்டும் வரைவு திட்டத்தை தாக்கல் செய்தார்.

மத்திய அரசின் வரைவு திட்டம் ஏற்பு
இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு 18-ம் தேதி பிறப்பிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்து இருநத்து. அதன்படி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் முன் நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை ஏற்றுக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். முன்னதாக இரண்டு தினங்களுக்கு முன் காவிரி மேலாண்மை வாரியம் என்று பெயர் சூட்டத் தயார் என்று தெரிவித்திருந்த மத்திய அரசு அதற்கு மறுநாளே காவிரி மேலாண்மை ஆணையம் என்று பெயர் சூட்டவிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதாவது வாரியமல்ல, ஆணையம்தான் என்று மத்திய அரசு தெரிவித்தது. மத்திய அரசின் இந்த வரைவு திட்டத்தை தற்போது சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாகத் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் இனி காவிரி மேலாண்மை ஆணையத்தேயே அணுக வேண்டும். மத்திய அரசை அணுகத் தேவையில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்த வரைவு திட்டத்தை அரசிதழில் உடனே வெளியிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பருவகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே (ஜூன் மாதம்) வரைவு திட்டத்தை செயலாக்கத்துக்கு கொண்டுவர வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

டெல்லியில் தலைமை அலுவலகம்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைமை அலுவலகம் பெங்களூரில் செயல்பட கூடாது. அது டெல்லியில் செயல்பட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது குறித்த வரைவு செயல் திட்டத்தில் கேரள, கர்நாடக அரசுகள் அளித்த பாதகமான பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவைச் செயல்படுத்த தாமதம் செய்த மத்திய அரசுக்கு எதிராக தமிழகஅரசு தொடர்ந்திருந்த அவமதிப்பு வழக்கும் முடித்து வைக்கப்பட்டது.

ஆணையத்துக்கே அதிகாரம்
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கே நீர் பங்கீடு, நீர் திறப்பு, கண்காணிப்பு, மேற்பார்வை ஆகிய அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படுகின்றன.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான 8 இடங்களையும் கண்காணிப்பது மற்றும் கட்டுப்படுத்துவதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நீர்பங்கீட்டில் உள்ள சிக்கல்களை 4 மாநிலங்களும் காவிரி மேலாண்மை ஆணையத்தை அணுகித் தீர்க்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியத்தைக் காட்டிலும், ஆணையத்துக்குத்தான் அதிகமான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் தேவைப்படும் பட்சத்தில் மட்டும் மத்திய அரசின் உதவியை நாடிக்கொள்ளலாம். பருவகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே காவிரி மேலாண்மை ஆணையத்தைச் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். இத்துடன் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. முன்னதாக காவிரி விவகாரத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தினார். அவர் நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இது தனது 30 வருட அரசியல் வாழ்வில் தனக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்றும், தான் இதையே சாதனையாக கருதுவதாகவும் ஒரு பேட்டியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். அவர் அன்று ஆரம்பித்து வைத்த போராட்டம் இன்று சுபமாக முடிந்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் தற்போது சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்டுள்ளது. இதுவும் அவருக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து