முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி வரைவு செயல் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்

வெள்ளிக்கிழமை, 18 மே 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் அளித்த ஆலோசனைகளும், திருத்தங்களும் ஏற்கப்பட்டு, திருத்தப்பட்ட வரைவு செயல்திட்டத்தை மத்தியஅரசு நேற்று தாக்கல் செய்தது. அதை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட் காவிரி மேலாண்மை ஆணையம் பருவகாலத்துக்கு முன்பாக அமைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. அந்த வரைவு செயல் திட்ட அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு.

1. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்துக்கே அனைத்து அதிகாரங்களும் உண்டு. மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. நீர்திறப்பில் எந்தவிதமான பிரச்சினை ஏற்பட்டாலும் ஆணையத்தைத்தான் மாநிலங்கள் அணுக வேண்டும். மத்திய அரசை அணுகத் தேவையில்லை.

2. அணைகளில் இருந்து நீர் திறப்பு, நீர் இருப்பு மேலாண்மை ஆகியவற்றை மேலாண்மை ஆணையமே மேற்கொள்ளும்.

3. வாரியம் என பெயர் சூட்டப்படாவிட்டாலும் ஆணையம் என்று மத்திய அரசு பெயர் சூட்டியுள்ளது. இதற்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளது.

4. காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதியின்றி காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் எந்தவிதமான அணைகளையும், தடுப்பணைகளும் தமிழக அரசும், கர்நாடக அரசும் கட்டக்கூடாது.

5. இறுதித்தீர்ப்பின்படி காவிரி நதிநீர் திறப்பை செயல்படுத்தும் அதிகாரம் பெற்றது காவிரி மேலாண்மை ஆணையம்தான். அதற்குத்தான் முழு அதிகாரங்களும் உண்டு.

6. காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமைக்கப்படும். நிர்வாக ரீதியான அலுவலகம் பெங்களூருவில் செயல்படும்.

7. காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அல்லது செயல்திறன் கொண்ட ஐ.ஏ.எஸ் அந்தஸ்தில் பொறியாளர் நியமிக்கப்படுவார்.

8. காவிரி மேலாண்மை ஆணையத்தில் 9 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். 2 முழு நேர உறுப்பினர்கள், 2 பகுதி நேர உறுப்பினர்கள், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களில் இருந்து தலா ஒருவர் பகுதி நேர உறுப்பினர்கள் ஆகியோர் இடம்பெறுவர். மத்தியஅரசு தரப்பி்ல ஒருவர் இடம் பெறுவார்.

9. காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் 65 வயது வரை அல்லது 5 ஆண்டுகள் வரை பதவியில் இருக்கலாம்.

10. ஆணையத்தின் செயல்பாட்டுக்கான ஆரம்ப கட்ட நிதியாக மத்திய அரசு ரூ.2 கோடி வழங்கும். பிறகு இந்த அமைப்பின் செலவினங்களில் கர்நாடகாவும் தமிழகமும் 40 சதவீதம், கேரளா 15 சதவீதம், புதுச்சேரி 5 சதவீதம் ஏற்க வேண்டும். காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான அறிக்கைகள், முடிவுகள், கள ஆய்வு கள் அனைத்தையும் அந்த அமைப்பு கவனித்துக் கொள்ள வேண்டும்.

11. காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகள் கர்நாடகாவின் கட்டுப்பாட்டிலும், மேட்டூர், லோயர் பவானி, அமராவதி உள்ளிட்ட அணைகள் தமிழகத்தின் கட்டுப்பாட்டிலும், பனசுரசாகர் கேரளாவின் கட்டுப்பாட்டிலும் இருக்கும்.

12. மாநிலங்களின் அணைகள், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் காவிரி அமைப்பு ஆய்வுகளை மேற்கொள்ளலாம். ஒவ்வொரு நீர் ஆண்டு ஜூன் மாதமும், அணைகளில் உள்ள நீரின் இருப்பு எவ்வளவு என்பதை இந்தக் குழு ஆய்வு செய்யும்.

13. அணைகளில் உள்ள நீர் இருப்பைக் கண்காணித்தல், மாநிலங்களுக்கு தீர்ப்பின் அடிப்படையில் நீரை பகிர்ந்தளித்தல் ஆகியவற்றை மேற்கொண்டு நீர் பங்கீட்டை முறைப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வரும். அணைகளில் உள்ள நீரைக் கண்காணித்து, நீர் திறந்து விடுவது உள்ளிட்டவற்றை இந்த அமைப்பு மேற்கொள்ளும். இதற்காக கர்நாடகா - தமிழக எல்லையில் உள்ள பிலிகுண் டுலுவில் அளவை நிலையம் அமைத்து கண்காணிக்கும்.

14. காவிரி மேலாண்மை ஆணையம் தேவைப்படும் பட்சத்தில் மட்டும் மத்திய அரசின் உதவியை நாடிக்கொள்ளலாம். பருவகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே காவிரி மேலாண்மை ஆணையத்தைச் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து