முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள மாநிலத்தில் பரவும் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 16 பேர் பலி - ஆய்வு செய்ய மத்திய குழு விரைவு

திங்கட்கிழமை, 21 மே 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் தாக்குதலால் அங்கு 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நோய் பாதிப்பு குறித்து மத்திய குழு ஆய்வு செய்கிறது.

மலேசிய வனப்பகுதியை பூர்வீகமாகக் கொண்ட வவ்வால்களிடம் இருந்து பரவும் ஒருவகை வைரஸ் நிபா என்று அழைக்கப்படுகிறது. வவ்வால்களால் பரவும் நிபா வைரஸ் மனிதர்களையும், விலங்குகுளையும் தாக்கி வருகிறது. பல நாடுளில் இந்த வைரஸ் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதல் ஏற்படுபவர்களுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகுபவர்களை கண்டறிந்து உடனடியாக உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனில் அவர்களுக்கு மரணம் ஏற்படுகிறது.

இந்நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில தினங்களாக இந்த கொடூரமான நிபா வைரஸ் பரவி வருகிறது. கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பலர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலுக்கு இரு வாரங்களில் ஒரு செவிலியர் உள்ளிட்ட 16 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இறந்தவர்கள் நிபா வைரஸ் பாதிப்பால் தான் இறந்தர்களா? என்பதை ஆய்வு செய்த பின்பே உறுதியாக கூற முடியும் என கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வைரஸ் தாக்குதலால் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான நோயாளிகளின் ரத்த மாதிரி புனேயில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்படுகின்றன. பலரின் ரத்த மாதிரிகள் புனே அனுப்பப்பட்டுள்ள நிலையில் அதன் முடிவுகள் இன்னமும் வெளியாகாமல் உள்ளன.

இதையடுத்து நிபா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோழிக்கோடு எம்.பி. முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து கேரள மாநிலத்திற்கு மத்திய குழு விரைந்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் வல்லுநர் குழு நேற்று விரைந்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளான நோயாளிகளை தனிமைப்படுத்தி, நோய் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய குழுவின் ஆய்வுக்கு பின்பே நிபா வைரஸ் குறித்த உண்மை நிலவரம் வெளியாகும் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து