முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்பந்து உலகில் தோன்றிய முதல் நட்சத்திர நாயகன் பீலே

புதன்கிழமை, 23 மே 2018      விளையாட்டு
Image Unavailable

ஸ்வீடனில் 1958-ல் நடைபெற்ற 6-வது உலகக் கோப்பையை ஸ்வீடன் நடத்தியது. இந்தத் தொடரில்தான் 17 வயதான பீலே அறிமுகமானார். முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் இரு ஆட்டங்களில் அவர் களமிறக்கப்படவில்லை. லீக் சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தை பிரேசில் கோல்கள் எதுவுமின்றி டிராவில் முடித்தது.

இதையடுத்து மாற்றங்கள் செய்யப்பட்ட அணியில் பீலேவுக்கு களமிறங்க வாய்ப்பு கிடைத்தது. சோவியத் யூனியனுக்கு எதிராக அவர் களமிறங்கிய முதல் ஆட்டத்தில் கோல் ஏதும் அடிக்கவில்லை. மாறாக நட்சத்திர வீரரான வாவா கோல் அடிக்க உதவி செய்திருந்தார். இந்த ஆட்டத்தில் பிரேசில் 2-0 என வெற்றி கண்டிருந்தது.

இதையடுத்து வேல்ஸ் அணிக்கு எதிரான கால் இறுதியில் பீலே கோல் அடித்து அசத்தினார். இந்த ஆட்டத்தில் அவர் அடித்த கோல் காரணமாகவே பிரேசில் அணி 1-0 என வெற்றி பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து பிரான்ஸ் அணிக்கு எதிரான அரை இறுதியில் பீலே ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை படைக்க பிரேசில் அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் நுழைந்தது.

இறுதிப் போட்டியில் பிரேசில், ஸ்வீடனை சந்தித்தது. உள்ளூர் ரசிகர்களின் பேராதரவுடன் களமிறங்கிய ஸ்வீடன் 4-வது நிமிடத்திலேயே கோல் அடித்து முன்னிலை பெற்றது. பிரேசில் அணியின் வாவா 9 மற்றும் 30-வது நிமிடங்களில் கோல் அடித்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுத் தந்தார். இதன் பிறகு பீலேவின் ஆதிக்கம் தொடங்கியது. 55 மற்றும் 89-வது நிமிடங்களில் அவர் கோல் அடிக்க முடிவில் 5-2 என்ற கணக்கில் பிரேசில் வென்று உலகக் கோப்பையை முதல்முறையாக கைகளில் ஏந்தியது. இறுதி போட்டி முடிந்ததும் உணர்ச்சி பெருக்கில் பீலே தனது சீனியர் வீரர்களை அரவணைத்தப்படி ஆனந்த கண்ணீர் வடித்தார்.

பிரேசில் அணிக்காக கடைசி 4 போட்டிகளில் மட்டும் விளையாடிய பீலே 6 கோல் அடித்ததுடன் பிரேசில் அணி சாம்பியன் பட்டம் வென்றதில் முக்கிய பங்குவகித்தார். இந்தத் தொடரில் இருந்துதான் கால்பந்து உலகின் நட்சத்திர நாயகனாக பீலே உருவெடுத்தார். அடுத்த இரு தசாப்தங்களாக உலகளாவிய ரசிகர்களை தனது கால்களின் வித்தையால் மெய்மறக்கச் செய்த வேளையில் அனைவரையும் கவர்ந்திழுக்கவும் செய்தார்.

ஸ்வீடனில் நடந்த உலகக் கோப்பையில் பிரான்சின் ஜஸ்ட் பான்டெய்ன் அடித்த 13 கோல்களையும் விடவும் பீலே அடித்த 6 கோல்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக அமைந்தது. பீலே அறிமுகமான தொடரில் பிரேசில் அணியில் காரின்சா, வாவா, டிடி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இருந்தனர். எனினும் 17 வயது சிறுவனான தன் மீது அணி நிர்வாகம் கொண்ட நம்பிக்கையை பீலே, நீர்த்து போகச்செய்யவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து