முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு ஜெயலலிதா வழியில் தமிழக அரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்

வியாழக்கிழமை, 24 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : 2013-ல் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா எத்தகைய பணிகளை மேற்கொண்டாரோ அந்த பணிகளை அவரது வழியில் தற்போது அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைசெயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

உரிமம் ரத்து

மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்திலேயே 2013-ஆம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை அருகில் வசிக்கும் பொதுமக்களிடமிருந்து புகார் வந்தது. அந்தப்புகாரின் அடிப்படையிலே கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு கொடுக்கப்பட்டுள்ள மின்இணைப்பை ஜெயலலிதா துண்டித்தார். ஸ்டெர்லைட் ஆலையினுடைய உரிமத்தையும் ரத்துசெய்தார். அதை எதிர்த்து, அந்த நிர்வாகம் 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 31-ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதியை பெற்றது. 8.8.2013 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் சில நிபந்தனைகளை விதித்து அந்த ஆலையை துவக்கிக் கொள்ளலாம் என்று ஒரு தீர்ப்பை வழங்கியது.

ஆலைக்கு மின்சாரம் துண்டிப்பு

2013-ல் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்திலே முதல்வர் ஜெயலலிதா மேல்முறையீடு செய்தார். தற்போது வழக்கு நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 9-ம் தேதியன்று, ஆலையை தொடர்ந்து இயக்குவதற்காக அந்த நிர்வாகம் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் விண்ணப்பம் செய்தது. அரசு அதை நிராகரித்து விட்டது. மாசுகட்டுப்பாட்டு வாரியத்தினுடைய உத்தரவின்பேரில் தமிழக மின்சார வாரியம் ஆலைக்கு வழங்கக்கூடிய மின் இணைப்பை இன்று துண்டித்து விட்டது. ஆகவே, அரசு தொடர்ந்து மக்களுடைய உணர்வை மதித்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2013-ல் இந்த ஆலை மூடுவதற்கு எத்தகைய பணிகளை மேற்கொண்டார்களோ, அந்த பணிகளை தற்போது அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

அப்பாவி மக்களை தூண்டிவிட்டு...

தற்பொழுது வேண்டுமென்றே அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த சில எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும், சில இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் அப்பாவி மக்களை தூண்டிவிட்டு, போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அரசு கிட்டத்தட்ட4, 5 மாதமாக, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், போராட்டக்காரர்களை அழைத்து 14 முறை கூட்டம் நடத்தி அரசால் எடுத்த நடவடிக்கை பற்றி விளக்கமாக தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், கடந்த ஏப்ரல் 14-ம் தேதி மாவட்ட கலெக்டர் அரசின் நிலைப்பாட்டை நாளிதழ்களில் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக விளம்பரம் செய்திருக்கின்றார். ஸ்டெர்லைட் ஆலை 2013-லிருந்து 2018 வரைக்கும் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் புதுப்பிப்பதற்காக விண்ணப்பம் செய்தது, அது ஏப்ரல் 9-ம் தேதி மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியில்லாமல் ஆலையை இயக்க முடியாது.

சமூக விரோதிகள் ஊடுருவல்

இவை அத்தனையும் அந்தப் பகுதி மக்களுடைய உணர்வுகளை, அவர்களுடைய வேண்டுகோளை அரசால் சட்டத்திற்குட்பட்டு நிறைவேற்றப்பட்டு வந்திருக்கிறது. பொதுமக்கள் பலமுறை போராட்டம் நடத்தியிருக்கின்றார்கள். அப்படி நடத்துகின்ற பொழுதெல்லாம் அமைதி காத்து, அறவழியிலே போராட்டம் நடத்தினார். ஆனால், இந்த முறை சில எதிர்க்கட்சிகளின் துண்டுதலின் பேரில், சில சமூக விரோதிகள் ஊடுருவி, அப்பாவி ஜனங்களை பயன்படுத்தி அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலே இந்த போராட்டத்தை இன்றைக்கு ஒரு மோசமான சூழ்நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இன்றைய தினம் உயிரிழந்த அத்தனைபேருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், மிகுந்த வேதனையும், துயரமும் நாங்கள் அடைந்துள்ளோம்.

மூடுவதற்கு நடவடிக்கை

ஏனென்று சொன்னால் அரசால் இவ்வளவு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் என்ன, என்ன கோரிக்கை வைத்தார்களோ, அதையெல்லாம் அரசால், சட்டத்திற்குட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்றைக்கும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஏப்ரல் 9-ம் தேதியன்று மாசுக்கட்டுப்பாடு வாரியம் அந்த ஆலை தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதி வேண்டுமென்று விண்ணப்பித்ததையும் நிராகரித்துள்ளது. அதற்கும், அவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வழக்கில் அரசின்சார்பாக வழக்கறிஞர்கள் அரசின் கருத்தை எடுத்து வைத்து வாதிட்டார்கள். ஆகவே, அரசைப் பொறுத்தவரைக்கும் மக்களுடைய உணர்வுக்கு மதிப்பளிக்கின்ற அரசு. இந்த ஸ்டெர்லைட்ஆலையைப் பொறுத்தவரைக்கும் அதை மூடுவதற்குண்டான நடவடிக்கையைஅரசு சட்டத்தின் வாயிலாக இன்றைக்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆகவே, அன்றையதினம் நடைபெற்ற சம்பவம் ஒரு விரும்பத்தகாத சம்பவம். அங்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. அந்த தடை உத்தரவில், ஒருபொதுக்கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ, ஊர்வலமோ நடத்தக்கூடாது. ஆகவே, விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்பதற்காகத்தான் இந்த 144 தடை உத்தரவே போடப்பட்டது. ஆனால், சில விஷமிகளும், சில அரசியல் கட்சித்தலைவர்களும் சுயநலத்திற்காக அப்பாவி மக்களை பயன்படுத்தி அத்தகைய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று மிகவேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து