முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செம திரை விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 25 மே 2018      சினிமா
Image Unavailable

நடிகர்-ஜி.வி.பிரகாஷ்குமார், நடிகை-அர்த்தனா, இயக்குனர்-வள்ளிகாந்த், இசை-ஜிவி பிரகாஷ், ஓளிப்பதிவு-விவேக் ஆனந்த்

திருச்சியில் காய்கறி மற்றும் கருவாடு ஆகியவற்றை லோடு வண்டியில் விற்று வருகிறார் நாயகன் ஜி.வி.பிரகாஷ். இவருடன் நண்பர் யோகி பாபுவும் வேலை பார்த்து வருகிறார். ஒருநாள் இரவில் குடுகுடுப்புக்காரன் ஜி.வி.பிரகாஷின் வீட்டை பார்த்து, கெட்ட காலம் வரபோகுது என்று சொல்ல, உடனே ஜி.வி.பிரகாஷின் அம்மா சுஜாதா சிவகுமார், ஜோதிடர் ஒருவரை சந்தித்து ஜாதகம் பார்க்கிறார்.அதில் ஜி.வி.பிரகாஷுக்கு மூன்று மாதத்திற்குள் திருமணம் செய்து வைக்க வேண்டும், இல்லை என்றால் 6 வருடம் கழித்துதான் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

இதனால், அவசரமாக ஜி.வி.பிரகாஷுக்கு பெண் தேடுகிறார்கள். ஆனால், எந்த பெண்ணும் ஜி.வி.பிரகாஷை திருமணம் செய்ய மறுக்கிறார்கள்.உள்ளூரில் தான் பெண் கிடைக்க மாட்டுது என்று முடிவு செய்து வெளியூரில் மன்சூர் அலிகான், கோவை சரளாவின் பெண்ணான நாயகி அர்த்தனாவை பெண் பார்க்க செல்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ், அர்த்தனா இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்து போக, திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

இந்நிலையில், அர்த்தனாவை அதே ஊரில் வசிக்கும் எம்.எல்.ஏ.வின் மகன் ஒருதலையாக காதலித்து வருகிறார். அர்த்தனாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதை அறிந்து, மன்சூர் அலிகானிடம் நீங்கள் வைத்திருக்கும் கடனை அடைத்து உங்களை பணக்காரனாக்குகிறேன் என்று கூறி, அவர் மனதை மாற்றுகிறார்.இதனால், ஜி.வி.பிரகாஷ் - அர்த்தனாவின் திருமணத்தை நிறுத்தி விடுகிறார் மன்சூர் அலிகான். திருமணம் நின்றதை நினைத்து ஜி.வி.பிரகாஷின் அம்மா, தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார். இதனால், கோபமடையும் ஜி.வி.பிரகாஷ், மன்சூர் அலிகானிடம் உன் பெண்ணை திருமணம் செய்து காட்டுவேன் என்று சவால் விடுகிறார். இறுதியில் ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய சவாலை வென்றாரா? மன்சூர் அலிகான், எம்.எல்.ஏ. மகனுக்கு அர்த்தனாவை திருமணம் செய்து வைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.முதன் முறையாக கிராமத்து இளைஞனாக நடித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். துறுதுறுவென நடித்து மனதில் நிற்கிறார். பெண் கிடைக்காமல் ஏங்குவது, அழகான பெண் கிடைத்தவுடன் கெத்தாக சுற்றுவதும், பெண் கிடைக்காது என்றதும் கோபத்துடன் சவால் விடுபவராகவும் நடித்து கவர்ந்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அர்த்தனா, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக காதல் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷுடன் படம் முழுக்க வலம் வருகிறார் யோகிபாபு. இவருடைய காமெடி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. சுஜாதா சிவகுமார், மன்சூர் அலிகான், கோவை சரளா ஆகியோர் தங்களுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். வித்தியாசமான கதையை கையில் எடுத்து படம் இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் வள்ளிகாந்த். முதல் பாதி வழக்கமான திரைக்கதை என்றாலும், பிற்பாதியில் எதிர்பார்க்காத திரைக்கதை அமைத்திருக்கிறார். படத்திற்கு பெரிய பலம் காமெடி. அதுபோல், பாண்டிராஜ்ஜின் வசனமும் கைக்கொடுத்திருக்கிறது.ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக ‘சண்டாளி...’ பாடல் முணுமுணுக்க வைக்கிறது. விவேக் ஆனந்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.மொத்தத்தில் ‘செம’ செமதான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து