முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபை தேர்தலில் 152 தொகுதிகள் வேண்டும் - பா.ஜ.கவுடன் கூட்டணிக்கு சிவசேனா நிபந்தனை

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை : மகராஷ்டிரத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைதேர்தலில் 152 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கூட்டணிக் கட்சியான பா.ஜ.கவுக்கு சிவசேனை நிபந்தனை விதித்துள்ளது.  கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.கவும், சிவசேனையும் இணைந்தே போட்டியிட்டன.

ஆனால், அதே ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், தொகுதிப் பங்கீட்டில் இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை.  இதனால், இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன. 260 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 122 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

ஆனால் 282 தொகுதிகளில் போட்டியிட்ட சிவசேனைக் கட்சி, 62 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன்பிறகு பாஜக கூட்டணியில் சிவசேனை இணைந்தது. மத்தியிலும், மகாராஷ்டிரத்திலும் ஆளும் பாஜக கூட்டணியில் சிவசேனைக் கட்சி இடம்பெற்றுள்ளது.  இருப்பினும், கடந்த 2014-ஆம் ஆண்டு மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சியமைத்ததில் இருந்தே, கூட்டணி கட்சிகளை பா.ஜ.க புறக்கணிப்பதாக சிவசேனை குற்றம் சாட்டி வருகிறது.

இதுதவிர, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விவசாயிகள் தற்கொலை, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு-சேவை வரி அமலாக்கம் உள்ளிட்ட விஷயங்களில் பா.ஜ.கவையும், பிரதமர் மோடியையும் சிவசேனைக் கட்சி தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதனால், இரு கட்சிகளிடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு ஆதரவு திரட்டுவதற்காக, சிவசேனைக் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவை, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா இரு தினங்களுக்கு முன் மும்பை சென்று சந்தித்தார்.  அப்போது, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் சிவசேனைக் கட்சிக்கு 152 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அமித் ஷாவிடம் உத்தவ் தாக்கரே நிபந்தனை விதித்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு, தொகுதிப் பங்கீடு தொடர்பாக விரைவில் சந்திப்பதாக அமித் ஷா உறுதியளித்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் சிவசேனைக் கட்சிக்கு 130 தொகுதிகளுக்கு மேல் பாஜக ஒதுக்குவதற்கு வாய்ப்பில்லை என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  மேலும், சிவசேனையுடன் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படவில்லையெனில், மக்களவைத் தேர்தலிலும், சட்டப் பேரவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுவதற்குத் தயாராக இருக்குமாறு பா.ஜ.க எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோரிடம் அமித் ஷா வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனையின் செல்வாக்கு மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், முதல்வர் பதவியைக் குறிவைத்து, பா.ஜ.கவுக்கு உத்தவ் தாக்கரே நிபந்தனை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து