சிங்கப்பூரில் பலத்த பாதுகாப்பு: இரு நாட்டு அதிபர்களும் இன்று சந்திப்பு

திங்கட்கிழமை, 11 ஜூன் 2018      உலகம்
trump-kim 2018 5 29

சிங்கப்பூர், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேற்று முன்தினம் சிங்கப்பூர் சென்றனர். இரு தலைவர்களும் இன்று சந்தித்துப் பேசுகின்றனர்.

கடந்த 1910 முதல் 1945 வரை ஜப்பானின் ஆட்சியின் கீழ் கொரியா இருந்தது. இரண்டாம் உலகப் போரின்போது கொரியா மீட்கப்பட்டது.போரில் வென்ற வல்லரசு நாடுகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் கொரியாவை இரண்டாகப் பிரித்தன. ரஷ்யாவின் ஆதரவுடன் வடகொரியாவில் கம்யூனிச ஆட்சியும் அமெரிக்காவின் ஆதரவுடன் தென்கொரியாவில் முதலாளித்துவ ஆட்சியும் அமைந்தன. 1950 ஜூனில் தென்கொரியா மீது வடகொரியா திடீர் தாக்குதல் தொடுத்தது. இந்த போர் 1953 ஜூலை வரை நீடித்தது. இதன் பின்னரும் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடித்து வந்தது.

கடந்த 2011 டிசம்பரில் கிம் ஜாங் உன், வடகொரியாவின் புதிய அதிபராக பதவியேற்றார். அதன்பின் அந்த நாடு அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் அதிகரித்தது. வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எந்நேரமும் போர் வெடிக்கலாம் என்று அஞ்சப்பட்டது. வடகொரியா மீது ஐ.நா. சபையும் அமெரிக்காவும் கடுமையான பொருளா தார தடைகளை விதித்தன.


இந்தப் பின்னணியில் தென்கொரியாவின் தீவிர முயற்சியால் சியோலில் கடந்த பிப்ரவரியில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதன் பின் கடந்த ஏப்ரலில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் சந்தித்துப் பேசினர். அப்போது அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க கிம் விருப்பம் தெரிவித்தார். இதனை டிரம்ப் ஏற்றுக் கொண்டார். பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகு ஜூன் 12-ம் தேதி டிரம்ப்பும், கிம்மும் சிங்கப்பூரில் சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டது.

வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் இருந்து அதிபர் கிம் ஜாங் உன், ஏர் சீனா விமானத்தில் நேற்று முன்தினம் மதியம் சிங்கப்பூர் சென்றார். விமான நிலையத்தில் அவரை அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார். அங்கிருந்து செயின்ட் ரெஜிஸ் நட்சத்திர ஓட்டலுக்கு கிம் சென்றார். சில மணி நேரங்களுக்குப் பிறகு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை அதிபர் கிம் சந்தித்துப் பேசினார்.

அப்போது, அதிபர் டிரம்புடனான சந்திப்பு வெற்றியடைந்தால் சிங்கப்பூரின் பங்கு வரலாற்றில் பதிவு செய்யப்படும் என்று கிம் தெரிவித்தார். சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய உதவிய சிங்கப்பூருக்கு அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

கனடாவின் கியூபெக் நகரில் நடைபெற்ற ஜி 7 மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர்  டிரம்ப் அங்கிருந்து நேரடியாக சிங்கப்பூர் சென்றார். இரவு 9 மணிக்கு சிங்கப்பூரின் விமான படைத் தளத் தில் தரையிறங்கிய அவரை, வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார். அப்போது, நிருபர்களிடம் டிரம்ப் பேசிய போது, அமைதி திட்டத்துக்காக சிங்கப்பூர் வந்துள்ளேன். இதுபோன்ற முயற்சி மிகவும் அரிய நிகழ்வு என்று தெரிவித்தார். அங்கிருந்து ஷாங்கிரி-லா ஓட்டலுக்கு டிரம்ப் சென்றார். சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை அவர் நேற்று சந்தித்து பேசினார்.

அதிபர் டிரம்ப்பும் அதிபர் கிம்மும் சிங்கப்பூரின் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் இன்று காலை 9 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 6.30) சந்தித்துப் பேசுகின்றனர். இந்த சந்திப்பின்போது வடகொரியாவில் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்துவார் என்று தெரிகிறது. வடகொரியாவில் விரைவில் அமெரிக்க தூதரகம் திறக்கப்படும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இரு தலைவர்களின் சந்திப்பு குறித்து செய்தி சேகரிப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து 3000-க்கும் மேற்பட்ட செய்தியாளர் கள் சிங்கப்பூரில் குவிந்துள்ளனர். டிரம்ப், கிம் தங்கியுள்ள ஓட்டல்கள், அவர்கள் சந்தித்துப் பேசும் ஓட்டல் உட்பட சிங்கப்பூர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலக நன்மை கருதி இரு தலைவர்களின் சந்திப்புக்காக சிங்கப்பூர் சார்பில் ரூ.135 கோடி செலவிடப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து