முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி கவர்னர் மாளிகையில் கெஜ்ரிவால் உள்ளிருப்பு போராட்டம்

செவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: டெல்லி அரசில் பணியாற்றும் உயரதிகாரிகள் கடந்த 4 மாதங்களாக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், அதனை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவை பிறப்பிக்கக் கோரியும் துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலை அவரது மாளிகையில் முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர்கள் சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய் ஆகியோர்  சந்தித்தனர்.

பின்னர், தங்களது கோரிக்கைகள் மீது துணைநிலை ஆளுநர் நடவடிக்கை எடுக்கும்வரை அவரது மாளிகையை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி அவர்கள்  இரவு முழுவதும் ஆளுநர் மாளிகையிலேயே தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதுகுறித்து ஆளுநர் தரப்பில்  வெளியிடப்பட்ட அறிக்கையில் காரணம் இல்லாமல் நடைபெறும் தர்ணா போராட்டம் என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, நேற்று காலை கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய் ஆகியோர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதில், "ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கடந்த 4 மாதங்களாக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அதோடு, பணிக்கு திரும்பாத ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் எஸ்மா சட்டம் பாயும் என்ற உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த போராட்டம் இன்னும் முடிவை எட்டாத நிலையில், டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் நேற்று காலை 11 மணி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், டெல்லி துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து