முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடப்பு கல்வி ஆண்டின் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் முன்கூட்டியே அறிவிப்பு அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்

செவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: நடப்பு கல்வியாண்டின் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இரண்டு தாள்களாக இருந்த மொழிப்பாடங்கள் ஒரே தாளாக மாற்றப்பட்டுள்ளது. அதனால் மொழிப்பாடங்கள் ஒரே தேர்வாகவே நடைபெறும். 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 8 தேர்வுகளுக்கு பதிலாக இனி 6 தேர்வுகள் மட்டுமே நடைபெறும். நடப்பு கல்வியாண்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி துவங்கி மார்ச் 19-ம் தேதி முடிவடையும். 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19-ம் தேதி வெளியிடப்படும்.

11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 6-ம் தேதி துவங்கி மார்ச் 22-ம் தேதி முடிவடையும். 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதி வெளியிடப்படும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 14-ம் தேதி துவங்கி மார்ச் 29-ம் தேதி முடிவடையும். அதன் முடிவுகள் ஏப்ரல் 29-ம் தேதி வெளியிடப்படும்.

மாணவர்கள் எவ்வித அழுத்தமும் இன்றி முன்னதாகவே தயாராகும் வகையில் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பாக 412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் உள்ளன.

நான்கு வாரங்களுக்கு முன்தான் அவை தொடங்கப்பட்டுள்ளன. வருங்காலத்தில் ஜூலை மாதத்திற்குள் பயிற்சி மையங்கள் இயங்க வழிவகை செய்யப்படும். எதிர்காலத்தில் நீட் தேர்வுக்காக வெளிமாநிலங்களுக்கு தமிழக மாணவர்கள் செல்ல முடியாதபடி தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. தமிழகத்திற்கு நீட் தேவையில்லை என்பது தான் அரசின் கொள்கை முடிவாகும். அதிலிருந்து விலக்கு பெற தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. மாணவர்களுக்கு ஓராண்டு முழுவதும் நீட் தேர்வு பயிற்சியளிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 11-ம் வகுப்புக்கான புதிய பாடத்திட்டத்தில் கடந்தாண்டு நீட் தேர்வில் கேட்கப்பட்ட 40 சதவீத கேள்விகளும் விடைகளும் இடம்பெற்றுள்ளன.

ஸ்மார்ட் கிளாஸ் மூலமாக மாணவர்கள் தங்கள் வீடுகளில் செல்போனில் பாடத்திட்டங்களை டவுன்லோடு செய்து, ஆசிரியர்கள் கற்றுத்தரும் பாடத்தை மீண்டும் படித்து பயிற்சி எடுக்கலாம். சுமார் 5,000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்தை செயல்படுத்த அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து