முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒளிமயமான எதிர்காலத்திற்கு துணிச்சலான நடவடிக்கை எடுத்துள்ளார் கிம் ஜாங் உன் அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி

புதன்கிழமை, 13 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: ஒளிமயமான எதிர்காலத்திற்காக துணிச்சலான நடவடிக்கையை கிம் ஜாங் அன் எடுத்துள்ளார் என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இரு துருவங்கள்
இரு துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் (வயது 71), வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் (34) சிங்கப்பூரில் ஜூன் 12-ந்தேதி உச்சி மாநாட்டில் சந்தித்து பேசப்போகிறார்கள் என்ற அறிவிப்பு, உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சந்திப்புக்காக 2 தினங் கள் முன்னதாகவே கிம் ஜாங் அன்னும், டிரம்பும் சிங்கப்பூர் வந்து சேர்ந்தனர். உலகமெங்கும் இருந்து ஊடகத்தினரும் வந்து குவிந்தனர். இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

பேச்சு வார்த்தை
பல அதிரடி திருப்பங்களுக்கு பின்னர் திட்டமிட்டபடி சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா நட்சத்திர ஓட்டலில் டிரம்ப், கிம் சந்திப்பு நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது. இதுவரை எந்த ஒரு அமெரிக்க ஜனாதிபதியும், வட கொரிய தலைவரும் தங்கள் பதவிக்காலத்தில் நேருக்கு நேர் சந்தித்து பேசியது இல்லை என்ற வகையில், இவ்விருவரின் சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் பெற்று விட்டது. இரு நாட்டு கொடிகளும் பின்னால் அணி வகுத்து இருக்க, டிரம்பும், கிம்மும் உள்ளூர் நேரப்படி காலை 9.04 மணிக்கு கை குலுக்கிக்கொண்டு, புகைப்படத்துக்கு ‘போஸ்’ கொடுத்தனர். அங்கு உள்ள நூலகத்துக்கு அவர்கள் பேசியவாறு நடந்து சென்றனர்.

ஒப்பந்தம் கையெழுத்து
அதைத் தொடர்ந்து டிரம்பும், கிம்மும் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது மொழிபெயர்ப்பாளர்கள் தவிர வேறு யாரும் உடன் இருக்கவில்லை. இந்த பேச்சுவார்த்தை சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பை தொடர்ந்து இரு தலைவர்களும் தத்தமது நாடுகளின் தூதுக்குழுவினர் உடனிருக்க சந்தித்துப் பேசினர்.பேச்சுவார்த்தையை அடுத்து டிரம்பும், கிம்மும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு வெளியிட்டனர்.

டிரம்ப் நன்றி
இந்த நிலையில், சிங்கப்பூரில் இருந்து அமெரிக்கா திரும்பும் வழியில், தனது ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் இருந்த படி, டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கிம் ஜாங் அன்னுக்கு நன்றி தெரிவித்து உள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் டொனால்டு டிரம்ப் கூறியிருப்பதாவது:- “தனது நாட்டு மக்களின் புதிய ஒளிமயம் மிக்க எதிர்காலத்திற்காக துணிச்சலான முதல் நடவடிக்கை எடுத்த சேர்மன் கிம்மிற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். முன்னெப்போதும் இல்லாத வகையில், முதல் முறையாக நடைபெற்ற எங்களின் சந்திப்பு, உண்மையான மாற்றம் சாத்தியம் என்பதை நிரூபணம் செய்துள்ளது.  அணு ஆயுதங்களை கைவிட்ட பிறகு, உலகத்துடன் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட வடகொரியாவுக்கு எந்த வரயறையும் விதிக்கப்படாது” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து