டெல்லி கவர்னர் மாளிகையில் 3-வது நாளாக கெஜ்ரிவால் தர்ணா

புதன்கிழமை, 13 ஜூன் 2018      இந்தியா
kejriwal 2017 5 6

புதுடெல்லி: டெல்லி கவர்னர் மாளிகையில் 3-வது நாளாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால், துணைநிலை கவர்னருக்கு அதிக அதிகாரம் உள்ளது; இதை பயன்படுத்தி, ஆம் ஆத்மி அரசு செயல்படுத்தும் திட்டங்களை, மத்திய அரசு முடக்கி வருவதாக அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டி வருகிறார்.

இந்த சூழலில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ரேஷன் பொருட்களை வீடு தேடிச் சென்று வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களை அண்மையில் துவங்கி வைத்தார். ஆனால், முதல்வரின் உத்தரவை செயல்படுத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். அதேபோல், தலைமைச்  செயலாளர் தாக்கப்பட்ட விவகாரத்துக்கு பிறகு, அமைச்சர்களுடனான கூட்டத்தையும் ஐஏஎஸ் அதிகாரிகள் புறக்கணித்து வருகின்றனர். இதனால், பணியை புறக்கணிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க  துணை நிலை ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று கெஜ்ரிவால் வலியுறுத்தி வருகிறார்.


இதற்காக, துணைநிலை கவர்னர், அனில் பைஜாலை சந்திப்பதற்காக, முதல்வர் கெஜ்ரிவால், அமைச்சர்களுடன், கவர்னர் மாளிகை சென்றார். ஆனால், கவர்னர் அனுமதி தரவில்லை. அதனால், கவர்னர் மாளிகையின் வரவேற்பாளர் அறையில், பல மணி நேரம் காத்திருந்தார்.அவருடன், மாநில அமைச்சர்களும் வந்தனர். எனினும், கவர்னரை சந்திக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து, கவர்னரை சந்திக்கும் வரை வெளியே செல்ல மாட்டேன் எனக் கூறி, கெஜ்ரிவால், வரவேற்பு அறையிலேயே அமர்ந்து, தர்ணா போராட்டம் நடத்தினார். கெஜ்ரிவாலும், அமைச்சர்களும், வரவேற்பு அறையிலேயே படுத்து உறங்கினர்.

இந்த நிலையில், 3-வது நாளாக இந்த தர்ணா போராட்டம் நீடித்து வருகிறது. இதற்கிடையில், மனிஷ் சிசோடியா மற்றும் மந்திரி சத்யேந்திர ஜெயின் ஆகியோர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கியுள்ளனர். நேற்று காலை டுவிட்டரில் பதிவிட்ட கெஜ்ரிவால், எங்கள் போராட்டம் நிச்சயம் தொடரும் என்றார்.

இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து