முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹபீஸ் சயீதின் அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முடியாது - பாக். தேர்தல் ஆணையம் நிராகரிப்பு

வியாழக்கிழமை, 14 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

மும்பை : மும்பை பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஜமா உத் தாவா அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீதின் மில்லி முஸ்லிம் லீக் அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முடியாது என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது.

பாகிஸ்தானில் வரும் ஜூலை மாதம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் திட்டத்துடன் ஹபீஸ் சயீதின் ஆதரவாளர்கள், மில்லி முஸ்லிம் லீக் எனும் அமைப்பை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கினர். இதையடுத்து, அந்த அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யக் கோரி, பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்தனர். இக்கோரிக்கையை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு நிராகரித்து விட்டது.

இதை எதிர்த்து, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மில்லி முஸ்லிம் லீக் அமைப்பு சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதை  விசாரித்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டு எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண்டது.

இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் கூட்டம், அப்துல் கபால் சோம்ரு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மில்லி முஸ்லிம் லீக் அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில், மில்லி முஸ்லிம் அமைப்பானது, தடை செய்யப்பட்ட ஜமா உத் தாவா அமைப்புத் தலைவர் ஹபீஸ் சயீதுடன் தொடர்பு கொண்ட அமைப்பு என்றும், ஆதலால் அதை அரசியல் கட்சியாக பதிவு செய்யக் கூடாது என்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, மில்லி முஸ்லிம் லீக் அமைப்பை, அரசியல் கட்சியாக பதிவு செய்வதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக மில்லி முஸ்லிம் லீக் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து