முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் மழையால் கபினி அணை நிரம்பியது! தமிழகத்திற்கு உபரி நீரை திறந்து விட்ட கர்நாடகா மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

வியாழக்கிழமை, 14 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர்: தொடர் மழையால் கபினி அணை நிரம்பியதால் தமிழகத்துக்கு உபரி நீரை கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தென்மேற்கு பருவ மழை வெளுத்து வாங்குகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தொடர் மழை காரணமாக கர்நாடக மாநிலத்தின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜசாகர், கபினி மற்றும் ஹேமாவதி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது.

இன்னும் அணை நிரம்ப 7அடியே உள்ளது. நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் கபினி அணை முழுவதும் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கபினி நிரம்பி வருவதால் பாதுகாப்பு கருதி அந்த அணையில் இருந்து உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. நேற்று இது ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினியில் திறக்கப்பட்ட தண்ணீர் 4 நாட்களில் தமிழக கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலு மற்றும் ஒகனேக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேரும். இதனால் மேட்டூர் அணை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த ஆண்டு ஜூன் மாதமே கர்நாடக அணைகள் நிரம்பி வருவதால் அங்கிருந்து திறக்கப்படும் உபரி நீர் மூலம் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் நீர் வரத்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று 743 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

ஒகனேக்கல்லில் தற்போது 1,500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கபினி அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால்ஒகனேக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. காவிரியில் வரும் நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் நீர்ப்பாசன துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இந்த ஆண்டு  காவிரியில் திறக்கப்படும் உபரி நீரால் குறுவை சாகுபடி செய்யலாம் என்ற எதிர்பார்ப்பில் டெல்டா விவசாயிகள் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து