முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய 2 நீதிபதிகள்: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றம் ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவு

வியாழக்கிழமை, 14 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த வழக்கில், இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை அளித்ததால், 3-வது நீதிபதிக்கு வழக்கை மாற்றி சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

மாறுபட்ட தீர்ப்பு
முன்னதாக தமிழக சட்டசபையில் 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, தினகரன் ஆதரவாளர்கள் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும், 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்தலாம் என்றும் தீர்ப்பளித்தார். அதே சமயம், 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று மற்றொரு நீதிபதி சுந்தர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். பொதுவாக ஒரு வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினால், வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்படுவது வழக்கம்.

இடைக்கால உத்தரவு...
அந்த வகையில், இரண்டு நீதிபதிகளும் இருவேறு தீர்ப்பினை அளித்ததால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்படுவதாகவும், 3-வது நீதிபதியின் தீர்ப்பு வரும் வரை 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு நீடிக்கும் என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. தகுதி நீக்க வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்படுவதாகவும், 3-வது நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என்றும், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அறிவித்தார்.

சபாநாயகரிடம் புகார்
முன்னதாக சில மாதங்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரிடம் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் சட்டப் பேரவைத் தலைவர் தனபாலிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில், 19 எம்.எல்.ஏக்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் ஜக்கையன் எம்.எல்.ஏ மட்டும் பேரவைத் தலைவர் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். மற்றவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார்.

ஜனவரி 23-ம் தேதி... 
இந்த தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.-க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எம். துரைசாமி, ஐகோர்ட் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகள் காலியாக இருப்பதாகவோ, அந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்போ வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார். தொடர்ந்து இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு கடந்த ஜனவரி 23-ம் தேதி ஒத்திவைத்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால் நீதிமன்ற அறை மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து