ஆப்கானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி : முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு ; இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்

வியாழக்கிழமை, 14 ஜூன் 2018      விளையாட்டு
Shikhar Dhawan 2018 6 14

பெங்களூரு : இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஒரேஒரு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று மழையினால் பாதிக்கப்பட்டது. இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்துள்ளது.

ஒரே ஒரு டெஸ்ட்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான இந்த டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.  அதன்பின் இந்திய கேப்டன் அஜிங்கியா ரஹானே கூறும்பொழுது, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இது வரலாற்று தருணம்.  நான் உண்மையில் ஆச்சரியத்தில் உள்ளேன் என கூறினார். டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பிறகு ஆப்கானிஸ்தான் பங்கேற்கும் முதல் டெஸ்ட் என்பதால் இது வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக பார்க்கப்படுகிறது.

அணி வீரர்கள்...

இந்தியா:

எம்.விஜய் அல்லது தவான், லோகேஷ் ராகுல், புஜாரா, ரஹானே (கேப்டன்), கருண் நாயர், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா அல்லது குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ்.

ஆப்கானிஸ்தான்:

முகமது ஷாசாத், ஜாவித் அகமதி, ரமத் ஷா, அஸ்கார் ஸ்டானிக்ஜாய் (கேப்டன்), நசிர் ஜமால் அல்லது ஹஷ்மத்துல்லா சாஹிதி, முகமது நபி, அப்சர் ஜஜாய், ரஷித்கான், அமிர் ஹம்சா அல்லது ஜாகிர் கான், யாமின் அகமத்ஜாய், முஜீப் ரகுமான் அல்லது வபதார்.

தவான் அதிரடி

இந்திய அணியின் முரளி விஜய் மற்றும் ஷிகர் தவான் விளையாட தொடங்கினர்.  தொடக்கத்தில் இருந்து தவான் அடித்து ஆட தொடங்கினார்.  அவரது ஆட்டத்தில் பவுண்டரிகளும், சிக்சர்களும் பறந்தன. 25 ஓவர்கள் முடிவில் 96 ரன்கள் எடுத்திருந்த ஷிகர் தவான் 26 ஓவர்கள் முடிவில் 2 பவுண்டரிகளை அடித்து 88 பந்துகளில் 104 ரன்கள் எடுத்துள்ளார்.  இதில் 3 சிக்சர்கள், 19 பவுண்டரிகள் அடங்கும். டெஸ்ட் போட்டி ஒன்றில் முதல் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளைக்கு முன் இதுவரை எந்த இந்தியரும் சதம் அடித்தது இல்லை என்ற நிலையில் தவான் இந்த சாதனையை படைத்துள்ளார். இந்திய அணி உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 27 ஓவர்களில் 158 ரன்கள் எடுத்தது.

மழை குறுக்கீடு

அடுத்து முரளி விஜய் உடன் லோகேஷ் ராகுல் ஜோடி சேர்ந்தார். முரளி விஜய் 80 பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முரளி விஜய் சதத்தை நெருங்கிய வேளையில் மழை குறுக்கீட்டது. இதனால் இந்தியா 45.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆட்டம் நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் தேனீர் இடைவேளை விடப்பட்டது. அப்போது முரளி விஜய் 94 ரன்களும், லோகேஷ் ராகுல் 33 ரன்களும் எடுத்திருந்தனர்.

உணவு இடைவேளைக்குள் சதமடித்த முதல் இந்திய வீரர்

இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக, தவானின் ஆட்டத்தில் அனல் பறந்தது. அவர் ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை விளாசி தள்ளினார். 47 பந்தில் அவர் அரை சதத்தை தொட்டார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய தவான், மதிய உணவு இடைவேளைக்கு முன்பு சதம் அடித்தார். 87 பந்தில் 18 பவுண்டரி, 3 சிக்சருடன் 100 ரன்னை தொட்டார். 30-வது டெஸ்டில் விளையாடும் தவானுக்கு இது 7-வது சதமாகும்.
இந்த போட்டியில் ஷிகர் தவான் விரைவாக சதமடித்ததன் மூலம் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் உணவு இடைவேளைக்குள் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். ஏற்கனவே, ஆஸ்திரேலிய வீரர்கள் விக்டர் டிரம்பர் (1902), சார்லி மெக்கார்ட்னி (1921), டான் பிராட்மேன் (1930), டேவிட் வார்னர் (2017) மற்றும் பாகிஸ்தான் வீரர் மஜித் கான் (1976) ஆகியோர் உணவு இடைவேளைக்குள் சதமடித்த மற்ற வீரர்களாவர்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து