முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்மேற்கு பருவமழை தீவிரம்: வீடுகள் இடிந்தும், மின்சாரம் தாக்கியும் இதுவரை கேரளாவில் 45 பேர் பலி

சனிக்கிழமை, 16 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் பலத்த மழையால் கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் வீடுகள் இடிந்தும், மின்சாரம் தாக்கியும் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
6 மாவட்டங்களில் சேதம்

கேரளாவில் கடந்த மே மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவ மழை கடந்த ஆண்டைக் காட்டிலும் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், பாலக்காடு, காசர்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. பலத்த மழையால் இந்த 6 மாவட்டங்களிலும் பெரிய அளவில் நிலச்சரிவும் வெள்ளசேதமும் ஏற்பட்டுள்ளது.

இதுவரை 45 பேர் பலி
கேரளாவில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் பல பகுதிகளில் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள், கட்டிடங்கள் இடிந்தன. நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக ஏராளமான பயிர் நிலங்களும் சேதமடைந்துள்ளன. இந்த தென்மேற்கு பருவமழைக்கு இதுவரை கேரளாவில் வீடுகள் இடிந்தும், மின்சாரம் தாக்கியும் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உள்பட 10-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்பு குழு
மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிர் இழந்தவர்களின் உடல், மற்றும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்புக் குழுவிலிருந்து 50 வீரர்கள் கோழிக்கோடு சென்றுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நவீன கருவிகள் மூலம் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டுவருகின்றனர். மீட்பு பணியில் இடிபாடுகளில் மனிதர்கள் எங்கே சிக்கியுள்ளார்கள் என்பதை அறிய மோப்ப நாயும் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

முதல்வர் பினராய் உத்தரவு
கேரளா முதல் அமைச்சர் பினராய் விஜயன் மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட 6 மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைவாக செய்து கொடுக்கவும் உத்தரவிட்டார்.

அமைச்சர்கள் ஆய்வு
அதோடு, மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை கேரளா அமைச்சர்கள் ராமகிருஷ்ணன், சசீந்திரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு மீட்புப்பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். மேலும், மீட்பு பணிகளை கேரள மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து