முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி பிரச்னையில் பிரதமா் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் நான்கு மாநில முதல்வர்கள் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே நீடிக்கும் மோதலை முடிவுக்கு கொண்டு வர பிரதமா் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 4 மாநில முதல்வா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கடந்த சில மாதங்களாகப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. அவா்களை உடனடியாகப் பணிக்குத் திரும்புவதற்கு துணை நிலை ஆளுநா் அனில் பைஜால் உத்தரவிட வலியுறுத்தி முதல்வா் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் துணை நிலை ஆளுநா் மாளிகையில் கடந்த ஒரு வாரமாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, நீதி ஆயோக்  கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்கு டெல்லி வந்த மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வா் பினராயி விஜயன், கா்நாடக முதல்வா் ஹெச்.டி.குமாரசாமி ஆகியோர் டெல்லியில் உள்ள ஆந்திரபவனில்  சந்தித்துப் பேசினா்.

அப்போது, கெஜ்ரிவாலின் உள்ளிருப்பு போராட்டம் குறித்து அவா்கள் விவாதித்தனா். இதைத் தொடா்ந்து, அவா்கள் நால்வரும், கெஜ்ரிவாலைச் சந்திப்பதற்காக, துணை நிலை ஆளுநா் மாளிகைக்குச் சென்றனா். ஆனால், அவா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து, முதல்வா் நால்வரும், பிரதமா் மோடியை ஞாயிற்றுக்கிழமை காலை சந்தித்துப் பேசினா். அப்போது, துணை நிலை ஆளுநருக்கும், டெல்லி அரசுக்கும் இடையே நீடிக்கும் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோடியிடம் அவா்கள் வலியுறுத்தினா். அரசமைப்புச் சட்டப்படி, கூட்டாட்சிக் கொள்கை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா். இந்தத் தகவல்களை, பின்னா் மம்தா பானா்ஜி தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில், பா.ஜ.க. கூட்டணி அல்லாத கட்சிகளை ஓரணியில் திரட்டுவதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தெலுங்கு தேசம், மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆகிய 4 கட்சிகளைச் சோ்ந்த முதல்வா்கள், டெல்லி முதல்வருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருப்பது அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து