முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவு 3 பேர் பலி - 100-க்கும் மேற்பட்டோர் காயம்

திங்கட்கிழமை, 18 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

ஒசாகா : ஜப்பானின் 2-வது மிகப்பெரிய நகரான ஒசாகாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். சேத விவரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியாத நிலையில் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பானின் 2-வது மிகப்பெரிய நகர் ஒசாகா. இங்கு அடுத்த ஆண்டு ஜி 20 மாநாடு நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஒசாகா நகரின் வடபகுதியை மையமாக வைத்து நேற்று காலை 8 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த இந்தப் பகுதியில், பூகம்பம் ஏற்பட்டதையடுத்து, தொழிற்சாலைகள் அனைத்தும் தங்கள் உற்பத்தியை நிறுத்தின. தொழிற்சாலையில் பணியாற்றி கொண்டிருந்த தொழிலாளர்களும் அலறியடித்துக் கொண்டு வெளியேறினார். கடைகள், வணிக வளாகங்களில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் சரிந்து கீழே விழுந்தன.

மேலும் வீடுகள் குலுங்கத் தொடங்கியவுடன் வீட்டில் இருந்த மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1- ஆக பதிவாகி இருந்தது. என்று ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே கூறுகையில், பூகம்பம் பாதிக்கப்பட்ட பகுதியில் அதிகாரிகள், மீட்புப்படையினர் மீட்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப் பூகம்பத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. முதல் கட்ட தகவலில் 3 பேர் இறந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன எனத் தெரிவித்தார்.

இந்தப் பூகம்பத்தில் ஒருவீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒருமுதியவர், சிறுவன் உள்பட 3 பேர் பலியானார்கள் என்று ஜப்பான் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பூகம்பம் ஏற்பட்ட ஒசாகா நகரில் புகழ்பெற்ற மிட்சுபிஷி,ஷார்ப், ஹோண்டா, ஸூசுகி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இந்தத் தொழிற்சாலைகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டு, 2 மணிநேரத்துக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்டன.

இந்த பூகம்பத்தால் யோட்டோ, நாரா, யோகோ, ஷிகா உள்ளிட்ட பல நகரங்களில் ஏறக்குறைய 1.70 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது, ஒரு லட்சம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது என ஜப்பான் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. மேலும், அதிவேக புல்லட் ரயில், மின்சார ரயில்சேவையும் பாதி வழியில் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டனர். இந்த பூகம்பத்தைத் தொடர்ந்து அடுத்து வரும் நாட்களில் மீண்டும் மிகப்பெரிய அதிர்வலைகள் உருவாகலாம் என்பதால் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து