முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குப்பைக் கிடங்காக மாறி வரும் எவரெஸ்ட் சிகரம்

திங்கட்கிழமை, 18 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

காத்மாண்டு : உலகின் மிக உயரமான சிகரம் என்று பெயர் பெற்றுள்ள எவரெஸ்ட் சிகரமானது குப்பைக் கிடங்காக மாறி வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரம் உலகிலேயே மிக உயரமானது. இதில் ஏறி சாதனை படைக்க ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மலையேறும் வீரர்கள் வருகின்றனர். 8,848 மீட்டர் (29,029 அடி) உயரமுள்ள இந்த சிகரத்தில் இந்த ஆண்டு மலையேறுவதற்கு 600-க்கும் அதிகமான வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் விட்டுச் செல்லும் கழிவுகளால் எவரெஸ்ட் சிகரமே குப்பை மேடாகக் கிடக்கிறது. அவர்களுடைய கூடாரங்கள், காலி காஸ் சிலிண்டர்கள், மீதமான உணவுகள், குடிநீர் பாட்டில்கள், மனிதக் கழிவுகளால் மோசமான நிலையில் உள்ளது.

மலையேறுபவர்களுக்கு உதவும் வீரர்களை ஷெர்பா என்று நேபாளத்தில் அழைக்கின்றனர். பெம்பா தோர்ஜே என்ற ஷெர்பா கூறும்போது, எவரெஸ்ட் சிகரம் ஏற வருவோருக்கு இதுவரை 18 முறை உதவியிருக்கிறேன். ஆனால் அவர்கள் அங்கே விட்டுச் செல்லும் கழிவுகளைக் காணும்போது சகிக்க முடியவில்லை என்றார்.

மலையேற்ற வீரர்கள் கீழே இறங்கும்போது சிகரத்திலிருந்து 8 கிலோ கழிவுகளை கீழே கொண்டு வந்தால், அவர்களது மலையேற்றக் கட்டணம் திரும்ப அளிக்கப்படும் என்று நேபாள அரசு 5 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. அதன்படி, 2017-ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் 25 டன் குப்பைகள், 15 டன் மனிதக் கழிவுகளை அடிவாரத்துக்குக் கொண்டு வந்தனர் என்று சாகர்மாதா மாசு கட்டுப்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

முன்பு மலையேற்ற வீரர்களே, மலையேற்றத்துக்கு தேவையான பொருட்களைக் கொண்டு வந்தனர். ஆனால் தற்போது ஷெர்பாக்கள், அந்தப் பொருட்களைச் சுமந்து செல்வதுடன் திரும்பும் போது அவர்களே கூடாரம் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து விடுகின்றனர். இதனால் ஷெர்பாக்களால் மலை உச்சியிலிருந்து கழிவுகளை சுமந்து வர முடிவதில்லை என்று மாசு கட்டுப்பாட்டு குழுவினர் தெரிவித்தனர். எவரெஸ்ட் சிகரத்தை குப்பை மேடாக்கும் நிலை நீடித்தால் அங்கு சுற்றுச்சூழல் பெரிய அளவில் மாசுபடும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து