முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரீஸ் அதிபர் மற்றும் பிரதமருடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: கிரீஸ் சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

முன்னதாக, கிரீஸ் அதிபர் புரோகோபிஸ் பாவ்லோபெளலோவை அவரது மாளிகையில் சந்தித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இருதரப்பு நலன்கள் குறித்து கலந்தாலோசித்தார். அதையடுத்து அந்நாட்டு பிரதமர் அலெக்ஸிஸ் சிப்ராஸை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ராம்நாத் கோவிந்த் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இது குறித்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது,
கிரீஸ் தலைவர்களுடனான சந்திப்பின் போது, இந்தியா - கிரீஸ் இடையேயான வர்த்தக, முதலீடு உறவுகளை மேம்படுத்தும் இந்தியாவின் முயற்சிகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மேற்கோள் காட்டினார். இரு நாடுகளிடையேயான வர்த்தக மதிப்பு ரூ. 3,609 கோடியாக இருப்பதாகவும், இந்தியா - கிரீஸின் வளங்களோடு ஒப்பிடுகையில் இந்த மதிப்பு குறைவு என்றும் தெரிவித்த ஜனாதிபதி, வர்த்தக உறவை விரிவுபடுத்த மேலும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

கிரீஸ் நிபுணத்துவம் பெற்றுள்ள கப்பல் வர்த்தகம், உணவு மற்றும் பால் பொருள்கள் தயாரிப்பு, சுற்றுலா ஆகிய துறைகளில் இந்தியா மேம்படுவதற்கான உதவிகளை கிரீஸ் வழங்க இயலும் என்றும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார். அதேபோல், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், வேளாண்மை, மனை வணிகம், உள்கட்டமைப்பு துறைகளைச் சேர்ந்த இந்திய நிறுவனங்கள், கிரீஸில் தொழில் தொடங்க ஆவலுடன் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார் என்று அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 11 ஆண்டுகளில் கிரீஸ் சென்ற முதல் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து