முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் தோப்பூரில் நேரில் ஆய்வு: எய்ம்ஸ் மருத்துவமனை 2 ஆண்டில் கட்டி முடிக்கப்படும் முதல்வரிடம் இன்று திட்ட அறிக்கை தாக்கல் - அமைச்சர் தகவல்

வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

திருமங்கலம்: மதுரை அருகே தோப்பூரில் ரூ.1,500 கோடி மதிப்பில் நவீன எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள 200 ஏக்கர் இடத்தை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப்பின் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் எய்ம்ஸ் மருத்துவமனை 2 ஆண்டில் கட்டி முடிக்கப்படும் என்றும் இதுகுறித்த திட்ட அறிக்கை முதல்வரிடம் இன்று தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆலோசனை
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தோப்பூரில் ரூ.1500 கோடி மதிப்பீட்டில் 750 படுக்கை வசதியுடன் கூடிய அதி நவீன எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள 200 ஏக்கர் இடத்தை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் மத்திய,மாநில அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

மத்திய குழுவினர்...
மறைந்த முதல்வர் அம்மாவின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு சிறப்பான மருத்துவவசதிகள் கிடைத்திடும் வகையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட ஒப்புக்கொண்ட மத்திய அரசு அதற்கான இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக குழுவினரை தமிழகத்திற்கு அனுப்பி வைத்தது. அதன்படி மதுரை தோப்பூர் உள்ளிட்ட 5 இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மத்திய குழுவினர் அது தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்திருந்தது.

மத்திய அரசு அனுமதி...
இந்நிலையில் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் மேற்கொண்ட தீவிர முயற்சியின் பலனாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தோப்பூரில் ரூ.1500கோடி மதிப்பீட்டில் 750 படுக்கை வசதியுடன் 100 இடங்களை கொண்ட மருத்துவக் கல்லூரியுடன் 200ஏக்கரில் அதிநவீன எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட அனுமதியளித்து மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

நேரில் ஆய்வு...
இதனிடையே தமிழகத்திலுள்ள இரண்டரை கோடி தென்மாவட்ட மக்கள் மற்றும் தென் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெற்றிடும் வகையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டதுடன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன், மதுரை கலெக்டர் கொ.வீரராகவராவ் மற்றும் மத்திய மாநில உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தின் வரைபடத்தினை பார்வையிட்ட அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தேவையான விளக்கங்களை மதுரை கலெக்டர் கொ. வீரராகவராவ் விரிவாக எடுத்துரைத்தார்.

சிறப்பு ஆலோசனை...
இதை தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்கள். பின்னர் அமைச்சர்கள், சுகாதாரத்துறை செயலர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் பங்கேற்ற சிறப்பு ஆலோசனை கூட்டம் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தில் நடைபெற்றது. அப்போது எய்ம்ஸ் மருத்துவமனையை இரண்டு ஆண்டுகளுக்குள் விரைவாக அமைப்பது தொடர்பான பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டது.

நிர்வாகிகள் பங்கேற்பு
இந்த ஆய்வின் போது மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.,சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.போஸ், கே.மாணிக்கம், பெரியபுள்ளான் (எ)செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் பி.அய்யப்பன்,கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மாநில எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகி எம்.எஸ்.பாண்டியன்,வில்லாபுரம் ஜெ.ராஜா, கு.திரவியம், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் வக்கீல் திருப்பதி,தமிழ்ச்செல்வம், ஓம்கே.சந்திரன். முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் அன்பழகன், மகாலிங்கம்,ராமசாமி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி, கட்சி நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ்,நிலையூர் முருகன். கபிகாசிமாயன்,பேரூர் கழகச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன். நெடுமாறன், பெரியசெல்வம், கேபிள் பார்த்தசாரதி, வருவாய் கோட்டாட்சியர் அரவிந்தன்,திருமங்கலம் வட்டாட்சியர் நாகரத்தினம்,மதுரை அரசு மருத்துவமனை டீன் டாக்டர்.மருதுபாண்டியன் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் பேட்டி...
ஆய்வுக்குப் பின் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
இந்தியாவில் வளர்ச்சி பெற்ற மாநிலத்தில் முதல்முறையாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவது தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் தான். இதற்கு முன்பாக பின்தங்கிய  மாநிலங்களான பீகாரில் பாட்னாவிலும், ஒரிசாவில் புவனேஸ்வர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் முன்னோடி மாநிலமாக திகழ்ந்திடும் தமிழகத்தில் தற்போது அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான வசதிகள் கொண்டதாக செயல்படும்.

முதல்வர் உத்தரவு
இதற்கு தேவையான அரசு நிலம் 192.7 ஏக்கருக்கு தடையில்லாச் சான்று தயார் நிலையில் உள்ளது. 20 மெகாவாட் மின்சார இணைப்பு தயாராக இருக்கிறது. 5 எம்.எல்.டி தண்ணீர் வழங்கிட அனைத்து வசதிகளும் உள்ளது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திடும் பணிகளை வேகமாக நடத்தி முடித்திட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தற்போது விதிக்கப்பட்டுள்ள 5 நிபந்தனைகளும் அதற்கான துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து அனைத்து வசதிகளும் முழுமைப்படுத்தப்படும்.

இன்று அறிக்கை தாக்கல்
இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு பிறகு இது தொடர்பான திட்ட அறிக்கை உடனடியாக தயாரிக்கப்பட்டு நாளையே (இன்று) முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு இன்னும் இரண்டு ஆண்டுகளில் இங்கு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும். தோப்பூர் பகுதியில் ஏற்கெனவே நான்குவழிச்சாலை  இணைப்பு இருக்கிறது. இந்த இடத்தில் நிலத்தடி நீர்மட்டம் நன்றாக உள்ளதால் தண்ணீர் பிரச்சனை வந்திட வாய்ப்பு கிடையாது. அத்துடன் ஐ.ஓ.சி நிறுவனம் தடையில்லா சான்று வழங்கியுள்ளது. மேலும் நூறு இடங்கள் கொண்ட மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையமும் 750 படுக்கை வசதி கொண்ட மிகப்பெரிய மருத்துவமனையாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது.

மல்டி ஸ்பெசாலிட்டி...
இதையடுத்து மதுரை, நெல்லை, தஞ்சை ஆகிய இடங்களில் தலா 150 கோடியில் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டு விரைவில் திறக்கப்படவுள்ளது. தமிழக சுகாதாரத்துறைக்கு உலகவங்கி தற்போது ரூ.2685 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் நடைபெறவுள்ள சுகாதாரத்துறையின் திட்டங்களுக்கு இந்த நிதி பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. இத்தகைய சிறப்பு மிகு திட்டங்களால் சுகாதாரத்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்திடும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து