முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணிந்தது கர்நாடக அரசு: காவிரி ஆணையத்திற்கு பிரதிநிதியை அறிவித்தது ஒழுங்காற்று குழுவுக்கும் உறுப்பினர் நியமனம்

திங்கட்கிழமை, 25 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர் : காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுவுக்கான பிரதிநிதிகளை கர்நாடக முதல்வர் குமாரசாமி நேற்று அறிவித்தார். மத்திய அரசு கர்நாடகத்திற்கான உறுப்பினரை தன்னிச்சையாக அறிவித்ததை தொடர்ந்து நேற்று ஆலோசனை நடத்திய அவர் அதற்கான உறுப்பினர்களை தற்போது அறிவித்துள்ளார்.

9 உறுப்பினர்கள்...

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது. இந்த ஆணையத்துக்கான உறுப்பினரை கர்நாடகா அரசு அறிவிக்காமல் இழுத்தடித்தது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 உறுப்பினர்களை மத்திய அரசு கடந்த 22-ம் தேதி அறிவித்தது. மொத்தம் 9 உறுப்பினர்களைக் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு மத்திய நீர் ஆணையத்தின் தலைவராக உள்ள மசூத் ஹூசைன் தலைவர் மற்றும் செயலாளராக ஏ.எஸ்.கோயல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளார். கர்நாடகா உறுப்பினரை அறிவிக்காததால் அம்மாநில நீர்வளத்துறை நிர்வாக செயலாளர் பகுதி நேர உறுப்பினராக இருப்பார் எனவும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

காவிரி ஒழுங்காற்று குழு

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைமை அலுவலகம் டெல்லியில் செயல்படும். இதேபோல் மத்திய நீர்வள ஆணைய பொறியாளர் நவீன் தலைமையில் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒழுங்காற்று குழுவில் தமிழக அதிகாரிகள் செந்தில், கிருஷ்ண உன்னி ஆகியோர் இடம்பெற்றுள்ளார். கேரளாவின் ஜோஷி, புதுச்சேரியின் சண்முகசுந்தரம் ஆகியோரும் உறுப்பினர்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றனர். ஆனால் கர்நாடகா உறுப்பினர் இடம்பெறவில்லை. காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம் புது தில்லியில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் இருந்து செயல்படவுள்ளது.

குமாரசாமி அறிவிப்பு

மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து காவிரி நீர் பங்கீடு குறித்து அமைக்கப்பட்ட மேலாண்மை ஆணையம் பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் குமாரசாமி தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தார். இந்த நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு  கர்நாடக பிரதிநிதிகளை அவர் அறிவித்து உள்ளார். காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான கர்நாடக மாநில உறுப்பினராக நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ்சிங் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். காவிரி ஒழுங்காற்று குழுவின் கர்நாடக உறுப்பினராக பிரசன்னா நியமிக்கப்பட்டு உள்ளார். காவிரி ஆணைய விவகாரத்தில் 3 நாளில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும்; கூட்டத்தில் கர்நாடக மாநில எம்பிக்களும் கலந்து கொள்வார்கள் என  கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து