முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

50 ஏக்கர் நிலப்பரப்பில் செங்கல்பட்டில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திங்கட்கிழமை, 25 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : செங்கல்பட்டு மாவட்டத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் நிறுவப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில், மாணவியர் விடுதிகள் 20 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை 10 நாட்கள் விடுமுறைக்குப் பின் நேற்று மீண்டும் கூடியது. கேள்வி நேரம் முடிந்ததும் சட்டசபை விதி 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வாசித்தார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

தரமான மருத்துவ சேவையை அனைத்து மக்களும், குறிப்பாக ஏழை, எளிய மக்கள் பெற்றிட வேண்டும் என்ற அடிப்படையில் அரசு எண்ணற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் மக்கள் நல்வாழ்வுத் துறையால் செயல்படுத்தப்பட இருக்கும் புதிய அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் வெளியிடுகிறேன்.

முதல்முறையாக...

இன்றைய காலகட்டத்தில், வாழ்க்கை முறை மாற்றத்தினால் ஏற்படுகின்ற தொற்றா நோய்களை தடுப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் பெரும்பங்கு வகிக்கிறது. இந்தியாவிலேயே முதல்முறையாக, தமிழ்நாட்டில் தான் சர்வதேச தரத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, உலகத்தரம் வாய்ந்த ‘‘சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம்" செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் 60 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.

பல சிகிச்சைகள்...

இங்கு பட்டப்படிப்பு பிரிவு, பட்ட மேற்படிப்பு பிரிவு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவுடன் கூடிய மருத்துவமனை, மாணவர் விடுதிகள், பணியாளர் குடியிருப்புகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டு, இதற்குத் தேவையான பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இங்கே இயற்கையான சூழ்நிலையில், மிகவும் பாதுகாப்பான சிகிச்சை முறைகளான யோகா சிகிச்சை, இயற்கை உணவு சிகிச்சை, நீர் சிகிச்சை, அக்குபங்க்சர், அக்குபிரஷர், காந்த சிகிச்சை, இயற்கை மூலிகை சிகிச்சை, மண் சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, நிற சிகிச்சை போன்ற பல சிகிச்சைகள் அளிக்கப்படும்.

மேலும் 3 தளங்கள்...

தமிழ்நாட்டில் உள்ள 985 துணை சுகாதார நிலையங்கள், ஒருங்கிணைந்த சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களாக, 82 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனைத்து சிறப்பு துறைகளும் ஒரே அடுக்குமாடி கட்டிடத்தில் செயல்படும் வகையில், தற்போது கட்டப்பட்டுள்ள சிறப்பு அடுக்குமாடி கட்டிடத்தில், 4-வது தளம் முதல் 6-வது தளம் வரை, மேலும் மூன்று தளங்கள் 55 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

மருத்துவக் கருவிகள்

மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சைக்காக, ‘பிரேக்கி' தெரப்பியுடன் கூடிய ‘சி.டி. ஸ்டிமுலேட்டர் ' மற்றும் ‘பங்க்கர்' கருவிகள் 22 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும். சாலை விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைத்திட, ‘தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைத் திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 20 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் 19 வட்ட மருத்துவமனைகள் என 64 அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டு வரும் அவசர கால சிகிச்சை மையங்களுக்கு, நவீன மருத்துவக் கருவிகள், 21 கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

மாணவியர் விடுதிகள்

காச நோயாளிகளுக்கு சிறந்த ஊட்டச்சத்து வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் 96 ஆயிரத்து 200 காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு 20 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும். தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் நலன் காக்கும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ‘‘மகப்பேறு மற்றும் குழந்தை நல ஒப்புயர்வு மையம் ஒன்று 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.  நடப்பாண்டில், காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில், மாணவியர் விடுதிகள் 20 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

பயிற்சி பள்ளிகள்...

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரகத்தின் கீழ், 12 அரசு துணை செவிலியர் பயிற்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பயிற்சிப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், நடப்பாண்டில் எழும்பூர், பூவிருந்தவல்லி மற்றும் விழுப்புரம் ஆகிய மூன்று இடங்களில் உள்ள துணை செவிலியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு, 17 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டித் தரப்படும்.தற்போது நான் அறிவித்துள்ள, இந்த திட்டங்களால் அரசு மருத்துவமனைகள் மேலும் சிறப்பாகச் செயல்பட்டு, ஏழை எளிய மக்கள் உயர்தர மருத்துவ சேவை பெற வழிவகுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து