முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 4 ஆண்டுகளில் 50 கோடி பேருக்கு சமூக பாதுகாப்புத் திட்டங்கள் விரிவாக்கம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

வியாழக்கிழமை, 28 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, நாட்டில் சமூகப் பாதுகாப்புக்கான திட்டங்கள் தற்போது 50 கோடி மக்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இது கடந்த 2014-ம் ஆண்டை விட 10 மடங்கு அதிகமாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மத்திய அரசின் பல்வேறு சமூக பாதுகாப்புத் திட்டங்களில் பயனடைந்தவர்களுடன், காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

ஏழைகளுக்கு வங்கிகளின் கதவுகளை திறந்துவிடல் அல்லது வங்கிக் கணக்கு இல்லாதோருக்கு வங்கிகளில் கணக்கு தொடங்குதல், நிதிவசதி இல்லாதோருக்கு நிதி வசதி ஏற்படுத்தி தருதல், ஏழைகள் மற்றும் நலிவடைந்தோருக்கு சமூகப் பாதுகாப்பு வழங்குதல் போன்ற முக்கிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு பிரதான் மந்திரி ஜன் தன் யோஜ்னா திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதில் 28 கோடி பேர் புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கி உள்ளனர். குறிப்பாக பெண்கள் ஏராளமானோர் வங்கிக் கணக்கு தொடங்கி உள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டின் பொருளாதார நீரோட்டத்தில் பெண்கள் இணைந்திருப்பது மிகவும் முக்கியமானதாகும்.

அதேபோல் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜ்னா, பிரதான் மந்திரி சுரக் ஷா பீமா யோஜ்னா, அடல் பென்ஷன் யோஜ்னா போன்ற சமூக பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து மத்திய அரசு விழிப்புணர்வை அதிகரிக்க செய்து வருகிறது.

அடல் பென்ஷன் யோஜ்னா திட்டத்தின் கீழ் உறுதியளிக்கப்பட்ட குறைந்தபட்ச பென்ஷன் திட்டத்தில் ஒரு கோடி பேர் சேர்ந்துள்ளனர். அத்துடன் 60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்காக பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜ்னா திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 3 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். மத்திய அரசின் இத்திட்டங்கள் வாழ்க்கையில் நிலையற்ற தன்மையை சமாளிக்க உதவி வருகின்றன. கடந்த 2014-ம் ஆண்டு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் 5 கோடி பேர் மட்டும் இணைக்கப்பட்டிருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 50 கோடியாகி உள்ளது. இது 10 மடங்கு அதிகமாகும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து