முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலாவது டி-20 போட்டி: அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

வியாழக்கிழமை, 28 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

டப்ளின் : முதலாவது டி20 போட்டியில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில்76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

பந்து வீச்சு தேர்வு

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன்பாக அருகில் உள்ள அயர்லாந்துடன் இந்திய அணி இரண்டு டி-20 போட்டிகளில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-அயர்லாந்து மோதும் முதலாவது டி-20 போட்டி டப்ளின் நகரில் நேற்று நடந்தது. கேரி வில்சன் தலைமையிலான அயர்லாந்து அணி எல்லா வகையிலும் இந்தியாவுக்கு சவால் கொடுக்கும் விதத்தில் களமிறங்கியது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி கேப்டன் கேரி வில்சன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

தவான் - ரோகித் அதிரடி...

இதன்படி இந்திய அணியின் சார்பில் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். ஆட்டத்தின் துவக்கத்திலிருந்தே இந்த ஜோடி அதிரடி காட்டினர். அதிரடியில் கலக்கிய இருவரும் விரைவில் தங்களது அரைசதத்தினை பூர்த்தி செய்தனர். இந்நிலையில் இந்திய அணி 160 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சிறப்பாக விளையாடி வந்த ஷிகர் தவான் 74(45) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னா 10(6) ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அவரைத் தொடர்ந்து தோனியும் 11(5) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

209 ரன்கள் இலக்கு...

இந்நிலையில் சதம் அடிப்பார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 97(61) ரன்களில் சாஸ் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த மற்ற வீரர்கள் யாரும் சோபிக்காததால், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணி சார்பில் அதிகபட்சமாக பீட்டர் சேஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் அயர்லாந்து அணிக்கு 209 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஷனோன் அரைசதம்

209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், அயர்லாந்து அணியின் சார்பில் பால் ஸ்டிர்லிங் மற்றும் ஜேம்ஸ் ஷனோன் ஆகியோர் களமிறங்கினர். இதில் பால் ஸ்டிர்லிங் 1(3) ரன்னில் பும்ரா பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து பால்பிர்னி 11(14) ரன்னில் சாஹல் பந்து வீச்சில் தோனி மூலம் வெளியேற்றப்பட்டார். அதிரடியின் கலக்கிய ஜேம்ஸ் ஷனோன் 29 பந்துகளில் தனது அரை சதத்தினை பூர்த்தி செய்தார். அடுத்து பந்து வீச வந்த குல்தீப் யாதவ் தனது முதல் ஓவரிலே சிமி சிங்-கின் விக்கெட்டை கைப்பற்றினார்.

குல்தீப் 4 விக்கெட்...

இறுதியில் அயர்லாந்து அணியில் பாய்ட் ராங்கின் 5(13) ரன்களும், பீட்டர் சாஸ் 2(8) ரன்களும் எடுத்து கடைசிவரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இறுதியில் அயர்லாந்து அணி டி-20 முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

தினேஷ் - ராகுலுக்கு வாய்ப்பு

வெற்றிக்குப் பின் பேசிய இந்திய கேப்டன் விராத் கோலி, ‘ரோகித்தும் தவானும் நன்றாக ரன் குவித்து நல்ல இடத்துக்கு கொண்டு வந்தனர். கடைசி ஓவரில் அயர்லாந்து அணி சிறப்பாக பந்துவீசியது. தொடக்க ஆட்டக்காரர்களைத் தவிர்த்து மிடில் ஆர்டரில் சோதனை முயற்சியாக சில மாற்றங்களை செய்ய இருக்கிறோம். அதற்கேற்ற மாதிரி அடுத்த போட்டி அமையும்.

முதல் போட்டியில் விளையாடாத சிலருக்கு அடுத்தப் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படும். சில தொடர்களில் அணியில் இடம் கிடைத்தும் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடு கிறது. அதைப் போக்கும் விதமாகவும் வீரர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் இதை செயல்படுத்த இருக்கிறோம் என்றார். இதையடுத்து அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடாத கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக் உட்பட சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

ரோகித் - தவான் ஜோடி சாதனை

அயர்லாந்து எதிரான முதல் டி20 போட்டியில் ரோகித் சர்மா - ஷிகர் தவான் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அரைசதம் கடந்தனர். சர்வதேச டி20 போட்டிகளில் தவான் - ரோகித் ஜோடி 150க்கும் அதிகமாக ரன்கள் அடிப்பது இது இரண்டாவது முறையாகும். இதன்மூலம் இந்த சாதனையை படைத்த முதல் ஜோடி என்ற சாதனையை இருவரும் படைத்துள்ளனர். முன்னதாக கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்த ஜோடி 158 ரன்கள் குவித்திருந்தது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் ரோகித் சர்மா, கே.எல். ராகுல் உடன் இணைந்து 165 ரன்கள் எடுத்ததே ஒரு இந்திய கிரிக்கெட் ஜோடி அதிகபட்ச ஸ்கோராகும். இந்திய அணி இதுவரை 13 முறை சர்வதேச டி20 போட்டிகளில் 100 ரன்களுக்கும் அதிகமான பாட்னர்ஷிப் ரன்களை எடுத்துள்ளது. இந்த ஜோடியில் 7 முறை ரோகித் சர்மா இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து