முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

காத்மண்டு: நேபாளத்தில் பாதுகாப்பாக இருக்கும் தமிழர்கள் 23 பேரை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் விவரம் வருமாறு:-
நேபாளத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்காக நேபாளத்திற்கு சென்றுள்ள தமிழர்களின் கதி என்ன?

சென்னையை சேர்ந்தவர்கள் 23 பேர் புனித யாத்திரைக்கு சென்றிருக்கின்றனர். பருவநிலை அங்கு மோசமாக இருப்பதால் அவர்கள் சிமிகோட் எனுமிடத்தில் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. வானிலை சரியான பின்பு சென்னை திரும்பி விடுவார்கள். மத்திய அரசு, நேபாளம் வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து பேசியுள்ளோம்.

கமிஷனுக்காக சேலம் -சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படுவதாக தி.மு.க.வின் டி.ஆர்.பாலு குற்றம் சாட்டியிருக்கிறாரே?
சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை மத்திய அரசின் திட்டம். டெண்டர் விடுவதில் மாநில அரசின் தலையீடு இல்லை. டி.ஆர்.பாலு மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர். இந்த குற்றச்சாட்டை சொல்லும்போது அவர்தான் அந்த குற்றத்தை அமைச்சராக இருந்தபோது செய்திருப்பாரோ என ஐயப்பாடு தோன்றுகிறது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தான் இத்திட்டத்தை நிறைவேற்றுகிறது. 100 சதவீதம் அவர்களின் முதலீடு தான். பொதுநலனை முன்னிட்டு மாநில அரசு ஒத்துழைப்பு தருகிறது. மாவட்ட நிர்வாகம் விவசாயிகளை சந்திக்க தயாராக இருக்கிறது. மக்கள் மீது திட்டத்தை திணிக்க வேண்டிய அவசியம் கிடையாது. எட்டுவழிச் சாலைக்கு அவசியம் உள்ளது. வலுக்கட்டாயமாக செய்யவில்லை.

எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா?
சுகாதார துறை அமைச்சர் சட்டப்பேரவையில் சொல்லியிருக்கிறார். முதல்கட்டமாக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கடுத்து நிதி ஒதுக்கீடு, அதிகாரிகள், உள்கட்டமைப்பு ஆகிய நடவடிக்கைகள் நடைபெறும்.

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யப்போவதாக சொல்லியிருக்கிறதே?
காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டிருப்பது மகிச்சியான செய்தி. கர்நாடகம் உச்ச நீதிமன்றம் சென்றாலும் அது எடுபடும் என்ற சாத்தியக்கூறு இல்லை. 15 ஆண்டுகள் இந்த உத்தரவில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. முதலில் கர்நாடகம் உச்ச நீதிமன்றம் செல்லட்டும். அதன்பின்பு, தமிழக அரசின் நிலையை சொல்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து