முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் துணை நிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே நிர்வாக அதிகாரம் உள்ளது: சுப்ரீம் கோர்ட்

புதன்கிழமை, 4 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: டெல்லியில் அதிகாரம் யாருக்கு? என்ற வழக்கில், நிர்வாக அதிகாரங்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே உண்டு என சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. மேலும், டெல்லியில் துணை நிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளது.

கடும் மோதல்...
யூனியன் பிரதேசமான டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தும், மத்திய அரசின் துணை நிலை ஆளுநர்தான் பெரும்பாலான நியமனங்கள், முடிவுகளை எடுத்து வந்தார். இதனால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், துணை நிலை ஆளுருக்கும் இடையே கடும் மோதல் இருந்து வந்தது.

குற்றச்சாட்டு...
அமைச்சரவை எடுக்கும் எந்த முடிவையும் டெல்லி துணை ஆளுநர் செயல்படுத்த விடுவதில்லை. ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குகிறார் என்று ஆம் ஆத்மி அரசு குற்றம் சாட்டியது. இதனால், டெல்லியில் யாருக்கு உண்மையான அதிகாரம் இருக்கிறது என விளக்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் கடந்த 2016-ம் ஆண்டு ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடர்ந்தது.

ஐகோர்ட் தீர்ப்பு...
இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட்4-ம் தேதி தீர்ப்பளித்தது. அதில் அரசியலமைப்புச் சட்டப்படி டெல்லியில் துணை நிலை ஆளுநர்தான் நிர்வாகத்தின் தலைவர். அமைச்சரவையின் பரிந்துரைப்படி, ஆலோசனைப்படி அவர் செயல்படலாம் எனத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட், அசோக்பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

இருவருமே பொறுப்பு...
இவ்வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு விபரங்கள் கீழ்வருமாறு:-
மத்திய அரசும் மாநில அரசுகளும் கூட்டட்சி தத்துவப்படி செயல்பட வேண்டும். மக்களின் பிரதிநிதிகள் மக்களின் கேள்விக்கு பதில் கூற கடமைப்பட்டவர்கள். அரசியல் சாசனத்தை மதிக்கும் வகையில் அனைவரின் செயல்பாடு இருக்க வேண்டும். மக்கள் நல திட்டங்கள் தாமதமானால் துணை நிலை ஆளுநர் மற்றும் டெல்லி அரசு என இருவருமே பொறுப்பு.

தலையிட கூடாது...
மாநில அரசுகளின் சட்டமன்ற அதிகாரங்களில் மத்திய அரசு தலையிட கூடாது. சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய தீர்ப்புகள் படி டெல்லி அரசுக்கு மற்ற மாநிலங்களை போல அதிகாரம் கிடையாது. எனினும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் முடிவுகளுக்கு துணை நிலை ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும்.  துணை நிலை ஆளுநருக்கென தனி அதிகாரங்கள் கிடையாது. எல்லா விஷயங்களுக்கும் அமைச்சரவைக்கு துணை நிலை ஆளுநரின் ஒப்புதல் அவசியமில்லை. நிர்வாக அதிகாரங்கள் அனைத்தும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே உண்டு. காவல், பொது அமைதி ஆகிய விவகாரங்கள் மட்டும் துணை நிலை ஆளுநரின் அதிகாரத்துக்கு உள்பட்டது. இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு புதுச்சேரியில் நிலவும் அதிகாரப்போட்டிக்கும் தீர்வாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
1) துணை நிலை ஆளுநர்களை விட யூனியன் பிரதேச அரசுகளுக்கே அதிகாரம்
2) மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகளை துணை நிலை ஆளுநருக்கு தெரியபடுத்தினால் மட்டும் போதும்.
3) யூனியன் பிரதேசங்களை நிர்வகிக்கும் பொறுப்பு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கூட்டானது.
4) மாநில அரசின் சட்டமன்ற அதிகாரங்களில் மத்திய அரசு தலையிட கூடாது,
5) அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு துணை நிலை ஒப்புதல் பெற தேவையில்லை.
6) ஆளுநர் தன்னிச்சையாக செயல்படக்கூடாது. இதற்கு அரசியல் சாசனம் அனுமதி வழங்கவில்லை.
7) அனைத்து விவகாரங்களையும் ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பக்கூடாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து