முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 200 ரூபாய் அதிகரிப்பு - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

புதன்கிழமை, 4 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 200 ரூபாய் உயர்த்தி ரூ.1,750 ஆக வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், துவரம் பருப்பு, சோளம் உள்ளிட்ட பொருட்களுக்கும் ஆதார விலையை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

விலை நிர்ணயம்...

2018-2019 கரிப் (சம்பா) பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் உள்ளிட்ட தானியங்களின் குறைந்தபட்ச ஆதார விலை, அவற்றின் உற்பத்தி விலையைப்போல் ஒன்றரை மடங்கு (150 சதவீதம்) அளவுக்கு நிர்ணயிக்கப்படும். மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விலை நிர்ணயம் செய்யப்படும். இதன்மூலம், விவசாயிகளின் வருமானம் உயரும். அதுபோல், 2018-2019 சர்க்கரை பருவத்துக்கான கரும்பின் நியாய நிலை, இன்னும் 2 வாரங்களில் அறிவிக்கப்படும் என்று ஜூன் 30-ம் தேதி விவசாயிகளின் மத்தியில் பிரதமர் மோடி கூறியிருந்தார்.

அமைச்சரவை ஒப்புதல்

இந்தநிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துவரம் பருப்பு, நெல், சோளம், கேழ்வரகு உள்ளிட்ட பொருட்களுக்கு  ஆதார விலை நிர்ணம் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  சாதாரண நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ.200 உயர்த்தி, ரூ.1,750 ஆக நிர்ணயம் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது. குறைந்த பட்ச ஆதார விலை உயர்வு மூலம் அரசின் உணவு மானிய செலவுகள் 11 ஆயிரம் கோடி ரூபாயாக உயர வாய்ப்புள்ளது.

ஒன்றரை மடங்கு...

முதல் தர நெல்லுக்கான குறைந்த பட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.220 உயர்த்தி ரூ.1,770 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை ஒன்றரை மடங்கு உயர்த்தப்படுவது இதுவே முதல்முறை. சோளத்துக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.275 ரூபாய் உயர்த்தி ரூ. 1700 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. துவரம் பருப்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.225 உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு ரூ.15 ஆயிரம் கோடி செலவாகும் என கூறப்பட்டுள்ளது.

விவசாயிகள் கோரிக்கை

அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் மத்திய வேளாண்மைத்துறை செயலாளர் சோபனா பட்நாயக் கூறுகையில், “ குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கையாக வைத்து வந்தனர். விவசாயிகள் மற்றும் வேளாண்மைத் துறையின் நலனை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது. நாங்கள் பணவீக்கத்தை கருத்தில் கொள்ளவில்லை. அதை கருத்தில் கொள்ளாமல்தான் இந்த முடிவை எடுத்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து