முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழைகளின் நலன் தொடர்ந்து புறக்கணிப்பு; தொழிலதிபர்களின் கைப்பாவை மோடி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கு

வியாழக்கிழமை, 5 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

லக்னோ : நாட்டில் உள்ள ஏழைகளையும், விவசாயிகளையும் துன்பத்துக்கு உள்ளாக்கிவிட்டு, பெரு நிறுவன முதலாளிகள் மற்றும் தொழிலதிபர்களின் கைப்பாவையாக பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்தத் தொகுதியான அமேதிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ராகுல் காந்தி சென்றுள்ளார். இதன் ஒரு பகுதியாக, அங்கு  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இதில் அவர் பேசியதாவது:

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்து 4 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. ஆனால், நாட்டு மக்களின் நலனுக்காகவும், அவர்களின் ஏற்றத்துக்காகவும் எந்தவொரு செயலையும் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை செய்யவில்லை. மாறாக, தொழிலதிபர்களின் நலன்களுக்காகவே அவர் பாடுபடுகிறார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பெரும் தொழிலதிபர்களின் கைப்பாவையாக மோடி செயல்படுகிறார். நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி ஆகிய பெயர்களில், ஏழைகளின் பணத்தை எடுத்துக் கொண்டு அவற்றை விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற மோசடி தொழிலதிபர்களுக்கு அவர் வழங்கியுள்ளார்.

வறுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுக்க எந்த நடவடிக்கையையும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு எடுக்கவில்லை. அதேசமயத்தில், பெரு நிறுவன முதலாளிகள் வாங்கியுள்ள ரூ.2 லட்சம் கோடி கடனை அவர் தள்ளுபடி செய்திருக்கிறார்.

உள்நாட்டு விவகாரங்கள் மட்டுமின்றி, சர்வதேச உறவுகளைப் பேணுவதிலும் மோடி தோல்வி அடைந்துள்ளார். குஜராத்துக்கு வருகை தந்த சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை மோடி வரவேற்ற அதே நேரத்தில், டோக்லாம் பகுதியில் சீன வீரர்கள் ஊடுருவினர். மோடியின் திறமையற்ற வெளியுறவுக் கொள்கைக்கு இதுவே நல்ல உதாரணமாகும்.  இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து