முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறைச்சி வியாபாரியை கொலை செய்த குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர்

சனிக்கிழமை, 7 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் இறைச்சி வியாபாரி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 8 பேருக்கு மாலை அணிவித்து, அவர்களுடன் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா புகைப்படம் எடுத்துக் கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு ராம்கர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பஜார் டண்ட் பகுதியில் மேற்குவங்க பதிவு எண் கொண்ட வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்த போது அந்த வாகனத்தைத் தடுத்து நிறுத்திய 30 பேர் கொண்ட கும்பல் மாட்டிறைச்சி வைத்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டு வாகன ஓட்டுனரான ஹசாரிபக் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அலிமுதீனை வெளியே இழுத்து சரமாரியாக தாக்கி வாகனத்துக்கும் தீ வைத்தது. இதில் டிரைவர் முகமது அலிமுதீன்  உயிரிழந்தார். சி.சி.டி.வி. வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்தனர்.

பசு பாதுகாப்பு என்ற பெயரில் சக மனிதர்களைக் கொல்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திர மோடியும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அடுத்த சில நாட்களிலேயே இந்த சம்பவம் நடந்தது. நாடுமுழுவதும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வழக்கில் 11 பேரை குற்றவாளிகளாக அறிவித்து விரைவு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஜார்கண்ட் ஐகோர்ட்டில் குற்றவாளிகள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட் 8 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை அண்மையில் ரத்து செய்தது. மேலும் அவர்களுக்கு ஜாமீனும் வழங்கியது.

இந்நிலையில் 8 பேரும் ஹசாரிபாக்கில் உள்ள மத்திய சிவில் விமான போக்குவரத்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா வீட்டிற்கு சென்றனர். அவர்களுக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த ஜெயந்த் சின்ஹா இனிப்பும் வழங்கினார். பின்னர் அவர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

இந்த சம்பவம் தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும் அரசியல் புயலை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் கூறுகையில், மத்திய அமைச்சர் ஒருவரே குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளது வெட்கக்கேடானது. இதை ஏற்க முடியாது. அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து