முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செல்போன் பறித்து சென்ற திருடர்களை 4 கி.மீ துரத்திப் பிடித்த கான்ஸ்டபிளுக்கு திருமண பரிசாக சம்பளத்துடன் ஹனிமூன் செல்ல ஏற்பாடு

சனிக்கிழமை, 7 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர்: செல்போனை பறித்துச் சென்ற திருடர்களை 4 கி.மீ. விரட்டிச் சென்று பிடித்த கான்ஸ்டபிளுக்கு திருமணப் பரிசாக 4 நாட்கள் தேன்நிலவுக்குச் செல்ல காவல் ஆணையர் ஏற்பாடு செய்துள்ளார்.

பெங்களூரு ஹனுமந்த் நகர் பெலந்தூர் போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருபவர் வெங்கடேஷ். இவர் இரவுப் பணி முடிந்து போலீஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது பாஸ்ட்புட் கடையில் வேலை பார்க்கும் ஒருவர் பணி முடிந்து வீட்டுக்குத் திரும்புகையில் கையில் செல்போனில் பேசிக் கொண்டே சாலையில் சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவர் அவர் கையில் இருந்த செல்போனை பறித்துச் சென்றனர். செல்போனைப் பறிகொடுத்தவர் அலறியதைக் கேட்ட, போலீஸ் கான்ஸ்டபிள் வெங்கடேஷ் பைக்கில் சென்ற அவர்களை விரட்டத் தொடங்கினார்.

ஏறக்குறைய 4 கி.மீ. தொலைவு ஓடிய வெங்கடேஷ், கோரமங்கலா பகுதியில் பைக்கில் இருந்த இருவரையும் பிடித்து சாலையில் தள்ளி விட்டார். அவர்களுடன் சாலையில் கட்டிப்புரண்டு சண்டையிட்டதில் 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் வெங்கடேஷிடம் ஒரு திருடன் மட்டும் சிக்கிக் கொண்டார். மற்றொருவர் பைக்கை அங்கேயே விட்டு சென்று தப்பினார். அதன்பின், அப்பகுதியில் ரோந்துப்பணி போலீசாருக்கு வெங்கடேஷ் தகவல் அளிக்கவே, அவர்கள் வந்து அந்தத் திருடனை கைது செய்தனர். அந்தத் திருடனை விசாரித்ததில், கோரமங்களா பகுதியைச் சேர்ந்த அருண் தயால் எனத் தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு, வெங்கடேஷின் செயல் குறித்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வெங்கடேஷை அலுவலகத்துக்கு வரவழைத்த போலீஸ் உயர் அதிகாரிகள் அவரைப் பாராட்டினார்கள். வெங்கடேஷுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. ஆனால், விடுமுறை கிடைக்காததால், தேனிலவுக்குச் செல்ல முடியாமல் இருந்தார். இதையடுத்து, வெங்கடேஷுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளித்து, கேரள மாநிலம் மூணாருக்கு தேனிலவு செல்லும் டிக்கெட், ஓட்டல் உள்ளிட்ட வசதிகளை போலீசார் அளித்தனர்.

இது குறித்து வெங்கடேஷ் கூறுகையில், என்னுடைய பணிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. என்னுடைய பணிக்கு இப்படி ஒரு பரிசும், அங்கீகாரமும் கிடைத்தது மகிழ்ச்சி எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து