சாமி ஸ்கொயர்’ படத்தில் த்ரிஷாவுக்குப் பதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்

சனிக்கிழமை, 7 ஜூலை 2018      சினிமா
sami- skoyar

சாமி ஸ்கொயர்’ படத்தில் த்ரிஷாவுக்குப் பதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்

‘சாமி ஸ்கொயர்’ படத்தில், த்ரிஷாவுக்குப் பதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

ஹரி இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சாமி ஸ்கொயர்’. விக்ரம் ஹீரோவாக நடிக்க, கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். 2003-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி வெளியான ‘சாமி’ படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகியுள்ளது. ஹரியைப் பொறுத்தவரை, இரண்டாம் பாகம் எடுக்கும்போது புதிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தினாலும், முதல் பாகத்தில் உள்ளவர்களையும் நடிக்க வைப்பார். குறிப்பாக, முதல் பாகத்தில் நடித்த ஹீரோயினை விட்டுவிடாமல் அடுத்தடுத்த பாகங்களில் தொடர்ந்து பயன்படுத்துவார்.

‘சிங்கம்’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் அனுஷ்கா. ‘சிங்கம் 2’வில் ஹன்சிகா ஹீரோயினாக நடித்தபோதும், ‘சிங்கம் 3’யில் ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடித்தபோதும், முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த அனுஷ்காவை விட்டுவிடாமல் எல்லா பாகங்களிலும் பயன்படுத்தினார். அப்படித்தான் த்ரிஷாவையும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் நடிக்கவைக்க விரும்பினார் ஹரி. த்ரிஷாவும் அதற்கு ஒப்புக் கொண்டார். ஆனால், என்ன காரணத்தினாலோ தெரியவில்லை... படத்தில் நடிக்க மறுத்து விலகிக் கொண்டார். த்ரிஷாவுக்கு முக்கியத்துவம் இல்லாததே விலகலுக்கு காரணம் என்று சொல்லப்பட்டது. எனவே, த்ரிஷாவுக்குப் பதில் அந்த வேடத்தில் நடிப்பது யார் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், அந்த கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், விக்ரமுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. பொதுவாக, சீரியலில் தான் ஒருவர் விலகிவிட்டால் ‘அவருக்குப் பதில் இவர்’ என்று கார்டு போட்டு வேறொருவரை நடிக்க வைப்பார்கள். தற்போது சினிமாவிலும் அது நடக்கத் தொடங்கியுள்ளது. பிரபு, பாபி சிம்ஹா, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ப்ரியன், வெங்கடேஷ் அங்குராஜ் இருவரும் ஒளிப்பதிவு செய்ய, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து