ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப. சிதம்பரத்தை கைது செய்ய ஆக. 7 வரை தடை

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2018      இந்தியா
chidambaram1 2017 10 21

புது டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 7-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-ல் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்த போது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இதற்கு, அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகவும், அதில் கார்த்தி சிதம்பரத்தின் தலையீடு இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீன் கோரி சிதம்பரம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் சிதம்பரத்தை ஜூன் 10-ம் தேதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த மனு மீதான அடுத்த கட்ட விசாரணை ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என்றும்  நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு மீதான அடுத்த கட்ட விசாரணை நேற்று நடைபெற்றது. இதில், ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 7-ம் தேதி கைது செய்ய தடை விதித்து அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து