முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுமி ஹாசினி கொலை வழக்கு குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்கு உறுதி செய்தது சென்னை ஐகோர்ட்

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்துக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.

சென்னை மாங்காட்டை அடுத்த மவுலிவாக்கம் மாதா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பாபு. இவரது மனைவி ஸ்ரீதேவி. இவர்களது மகள் ஹாசினி (6). கடந்த 5-2-2017-ம் ஆண்டு வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஹாசினி திடீரென மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் மாங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து ஹாசினியை தேடி வந்தனர்.

விசாரணையில் அதே குடியிருப்பில் வசிக்கும் குன்றத்தூர் சம்பந்தன் நகர் ஸ்ரீராம் சாலைப் பகுதியைச் சேர்ந்த சேகர் - சரளா தம்பதியின் மகன் தஷ்வந்த் (24), சிறுமி ஹாசினியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததும், பின்னர் கொலை செய்து விட்டு, சடலத்தை துணிப் பையில் திணித்து வெளியே எடுத்துச் சென்று தாம்பரம் -மதுரவாயல் புறவழிச் சாலையில் அனகாபுத்தூர் அருகே தீ வைத்து எரித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து மாங்காடு போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து தஷ்வந்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தஷ்வந்த் ஜாமீனில் வெளியே வந்தார். இதைத் தொடர்ந்து, டிசம்பர் 2-ம் தேதி தனது தாய் சரளாவிடம் ரேஸ் விளையாட பணம் கேட்டு மிரட்டினார். அவர் மறுக்கவே தாயைக் கொலை செய்து விட்டு 25 பவுன் நகைகளுடன் மும்பைக்கு தப்பிச் சென்று தலைமறைவானார்.

இதையடுத்து தனிப்படை போலீசார் மும்பை சென்று செம்பூர் ரேஸ்கோர்ஸில் பதுங்கியிருந்த தஷ்வந்தை கடந்த டிசம்பர் 6-ம் தேதி கைது செய்தனர். டிசம்பர் 7-ல் மும்பை நீதிமன்றத்தில் வாரண்ட் பெற்று சென்னைக்கு அழைத்து வந்த போது மும்பை விமான நிலையம் அருகே உள்ள ஓட்டலுக்குச் சென்றனர். அப்போது தஷ்வந்த் கைவிலங்குடன் போலீசாரிடம் இருந்து தப்பிச் சென்றார். கைவிலங்குடன் தஷ்வந்த் தப்பிய புகைப்படங்கள் மும்பையில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டன. இந்நிலையில் கைவிலங்குடன் ஓட்டலில் நடமாடிய தஷ்வந்தை அப்பகுதி மக்கள் அடையாளம் கண்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதனையடுத்து மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் அந்தேரியிலுள்ள ஓட்டலில் பதுங்கியிருந்த தஷ்வந்தை போலீசார் மீண்டும் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்தனர். பரபரப்பான இந்தக் கொலை வழக்கு, செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். இவ்வழக்கு விசாரணை நீதிமன்றக் கதவுகள் அடைக்கப்பட்டு ரகசியமாக நடைபெற்றது. இவ்வழக்கில் முக்கிய சாட்சிகளாக 30 பேர் விசாரிக்கப்பட்டனர். 42 ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணை முடிவடைந்து, நீதிபதி வேல்முருகன் அளித்த தீர்ப்பில், தஷ்வந்த் மீதான குற்றம் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பு வழங்கினார்.

அதில் ஹாசினியைக் கடத்தியது, துன்புறுத்தியது, பாலியல் வன்கொடுமை செய்தது, சடலத்தை எரித்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக அதற்கான சட்டப்பிரிவுகளின் கீழ் தஷ்வந்துக்கு 46 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கொலை செய்த குற்றத்துக்காக தூக்கு தண்டனையும் விதித்து இவற்றை ஏக காலத்தில் அனுபவித்து அவரைத் தூக்கிலிட உத்தரவிட்டார்.

இதையடுத்து, தூக்கு தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் சென்னை ஐகோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்துக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது. நீதிமன்றம் தனது தீர்ப்பில் தஷ்வந்த் மீதான குற்றச்சாட்டானது, மகிளா நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவாக நிரூபிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து