முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாஜ்மஹாலை பாதுகாக்க முடியவில்லை என்றால் அதனை மூடி விடுங்கள்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

புதன்கிழமை, 11 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பாதுகாக்க முடியவில்லை என்றால் அதனை மூடி விடுங்கள் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் வருகை தருகின்றனர். தாஜ்மஹால் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவாகி வருவதால் காற்று மாசு ஏற்பட்டு தாஜ்மகாலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வெள்ளை பளிங்கு கல்லால் கட்டப்பட்ட தாஜ்மஹால், தற்போது செம்பழுப்பு நிறத்திற்கு மாறி விட்டது.

தாஜ்மஹாலை உரியமுறையில் பாதுகாக்காமல் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாகவும், இது குறித்து மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கலானது. இந்த வழக்கு தொடர்பாக தொல்பொருள் ஆய்வுத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு உத்தரவுகள் பிறக்கப்பட்ட போதிலும் அவற்றை செயல்படுத்தவில்லை. தாஜ் கொரைடார் என்ற பெயரில் அந்த பகுதியில் தொழிற்சாலைகளை அதிகரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் நீதிபதி மதன் பி லோகூர் மற்றும் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

அரிய பொக்கிஷங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்க்க லட்சக்கணக்கானோர் உலகம் முழுவதும் இருந்து வருகை தருகின்றனர். இதன் மூலம் பெரிய அளவில் அந்நிய செலவாணியை மத்திய அரசு ஈட்டி வருகிறது. ஈபில் டவர் உட்பட பிறநாடுகளில் உள்ள உலக அதிசயங்களை பாதுகாக்க எந்த அளவிற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்பதை பார்க்கும் போது நமக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதே சமயம் தாஜ்மஹாலை பாதுகாக்க அத்தகைய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

இந்தியாவில் எத்தனையோ அதிசய பொக்கிஷங்கள் இருந்தாலும், அவற்றில் தாஜ்மஹால் தனித்துவம் மிக்கது. தாஜ்மஹாலுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது நமக்கு மட்டும் இழப்பல்ல. உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் இழப்புதான். தாஜ்மஹாலை உரிய முறையில் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். இல்லையென்றால் அதனை மூடி விடலாம் அல்லது இடித்து தள்ளி விடலாம்.

தாஜ்மஹால் பாதுகாப்பில் உரிய அக்கறையின்றி மத்திய அரசு செயல்படுகிறது. அது போலவே தாஜ்மஹாலை பாதுகாக்க நீண்டகால அடிப்படையில் திட்டத்தை உத்தர பிரதேச அரசு தயாரிக்கவில்லை. இந்த அக்கறை இன்மையால் தாஜ்மஹாலின் பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து