கபினி அணையில் இருந்து காவிரியில் கூடுதல் நீர் திறப்பு எதிரொலி: தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு 50 ஆயிரம் கன அடியாக உயர்வு - மேட்டூர் நீர்மட்டம் உயர்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி !

புதன்கிழமை, 11 ஜூலை 2018      இந்தியா
Cauvery water open to tamilnadu 2018 7 10 0

பெங்களூர் : கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து நேற்று ஒரே நாளில் 3 முறை காவிரியில் கூடுதல் நீர் திறக்கப்பட்டதால் தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு 50 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இது டெல்டா விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் கனமழை

கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து நேற்று தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 45,000 கனஅடியில் இருந்து 50,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கபினியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு நேற்று ஒரே நாளில் 3வது முறையாக அதிகரிக்கப்பட்டது. கபினி அணையின் நீர்மட்டம்  110 அடியை தொட்டு உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 124.80 அடி இதனால் நேற்று காலை 38,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் பிற்பகலில் 45,000 கனஅடியாகவும், மாலையில் 50,000 கனஅடியாகவும் உயர்த்தப்பட்டது.

கிருஷ்ணராஜசாகர்...

மேலும், காவிரியின் குறுக்கே அமைந்துள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அந்த அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கபினி ஆறு உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. 124 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 115.2 அடியாக உள்ளது. நேற்று தண்ணீர் வரத்து 35 ஆயிரத்து 698 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 3658 கனஅடி உபரி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு

ஹேரங்கி அணைக்கு நேற்று காலை 14 ஆயிரத்து 973 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 11 ஆயிரத்து 938 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதே போல ஹேமாவதி அணைக்கு 20 ஆயிரத்து 535 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 2400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு செல்கிறது. கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட சுமார் 50 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்தை நோக்கி வேகமாக வருகிறது. இதனால் ஒகேனக்கல்ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.

3-வது நாளாக தடை

ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குளிக்கவும், பரிசல் இயக்கவும் நேற்று 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்வதையும், அருவிகளில் தண்ணீர் கொட்டுவதையும் சுற்றுலா பயணிகள் கரையில் நின்று வேடிக்கை பார்த்து வருகிறார்கள். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 14 ஆயிரத்து 434 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 32 ஆயிரத்து 284 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

70 அடியை தாண்டும்...

நேற்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்து நீர்மட்டம் 68.42 அடியாக அதிகரித்தது. கடந்த 2 நாட்களில் 5 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 70 அடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தால் அணையின் நீர்மட்டம் தினமும் 1அடி அதிகரிக்கும். தற்போது 32ஆயிரம் கனஅடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் தினமும் 3அடி வீதம் உயர வாய்ப்பு உள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் இம்மாத இறுதிக்குள் காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டும்போது, அணை திறக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு இதே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 21.75 அடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு நேற்று 68.42 அடியாக உள்ளது. சென்ற ஆண்டை விட தற்போது அணை நீர்மட்டம் அதிகமாக இருப்பதாலும், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதாலும் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Jallikattu 2019 | Alanganallur

Viswasam Review | Ajith | Nayanthara | Viswasam Movie review

PETTA MOVIE REVIEW | Petta Review | Rajinikanth | Vijay Sethupathi | Karthik Subbaraj | Anirudh

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5

Power of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து