நீட் தேர்வு விவகாரத்தில் ஐகோர்ட் கிளை உத்தரவு எதிரொலி: மருத்துவ படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நிறுத்திவைப்பு
.jpg?itok=JCRcHlYO)
சென்னை : நீட் தேர்வு விவகாரத்தில் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவை அடுத்து மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நிறுத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கலந்தாய்வு தொடக்கம்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைப்பெற்றது. நீட் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு மாணவ- மாணவிகள் அழைக்கப்பட்டனர். அரசு மருத்துவ கல்லூரிகள், தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நடந்த கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பின. இதனை தொடர்ந்து 7 தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு வருகின்ற 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. நிர்வாக ஒதுக்கீட்டில் 723 எம்.பி.பி.எஸ். இடங்களும், 645 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன. அவற்றை அரசு கலந்தாய்வின் மூலம் கடந்த ஆண்டு முதல் நிரப்பி வருகிறது. நிர்வாக ஒதுக்கீடு எம்.பி.பி.எஸ். கட்டணம் வருடத்திற்கு ரூ.12.5 லட்சமும், பி.டி.எஸ்.க்கு ரூ.6 லட்சமும் அரசு நிர்ணயித்துள்ளது.
ஐகோர்ட் உத்தரவு
இந்த நிலையில் நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் குளறுப்படி காரணமாக தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தலா 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும், கலந்தாய்விற்கு தடை விதித்தும் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இதையடுத்து 16-ம் தேதி நடைபெறுவதாக இருந்த நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய தரவரிசை பட்டியல் தயாரித்து கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.
அரசு அறிவிப்பு...
இந்நிலையில், நீட் தேர்வு விவகாரத்தில் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவை அடுத்து மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நிறுத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை குழுவின் செயலாளர் செல்வராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.,
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்பில் 2018 - 19 கல்வியாண்டில் மாணவர்கள் சுயநிதி மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு 16,17,18 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் போடப்பட்ட வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில், சுயநிதிக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 16,17,18 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த கலந்தாய்வு ரத்து செய்யப்படுகிறது. இந்த கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.