முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் மதுரையில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை: வைகை ஆற்றிலே நீர் செல்கின்ற பொழுது இந்த மாநகரத்தினுடைய கழிவு நீரெல்லாம் ஆற்றிலே கலக்கக் கூடிய சூழ்நிலை இருக்கின்றது. ஆகவே, நீர் மாசு படுகின்றது. அதைத் தடுப்பதற்காக ஆங்காங்கே சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, வருகின்ற கழிவுநீரை சுத்திகரித்து ஆற்றில் விடுவதற்குண்டான சூழ்நிலையை இந்த அரசு உருவாக்கி தரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் பேசினார்.

உயர்மட்ட மேம்பாலம்
மதுரை காளவாசல் சந்திப்பில் ரூ. 54 கோடியில் நான்கு வழித்தடத்துடன் கூடிய சாலை மேம்பாலம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் அவர் பேசியதாவது,
மதுரை, காளவாசல் சந்திப்பில் முதன்முறையாக ரூ. 54.07 கோடி மதிப்பீட்டில் நான்கு வழித்தடத்துடன் கூடிய சாலை மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறைவதுடன், சந்திப்பில் வாகன காத்திருப்பு நேரம் குறையும். மேலும், அருகிலுள்ள அரசரடி சந்திப்பும், இப்பணியுடன் இணைந்து மேம்படுத்தப்பட உள்ளது. 

கோரிப்பாளையத்தில் மேம்பால பணி
அதோடு மதுரை போக்குவரத்து நெரிசல் மிகுந்த கோரிப்பாளையம் சாலை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலப் பணிகளை விரைந்து துவக்கும் பொருட்டு, அதிக போக்குவரத்து செரிவுள்ள தடத்தை ஆய்வு செய்து, குறைந்த அளவு நில எடுப்புடன் செயல்படுத்த திட்டத்தினை மறுஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்துப் பகுதியான செல்லூர் இரயில்வே மேம்பாலத்தின் அணுகு சாலையில் விபத்தினை குறைக்கும் பொருட்டு, செல்லூர் இரயில்வே மேம்பாலத்தின் கீழ் சூலமங்களம் சாலையை அடைய உரிய சேவைச் சாலை ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் அமைக்க சட்டமன்றத்திலே அறிவிக்கப்பட்டு, விரைவில் பணி துவங்கப்படவுள்ளது.

மதுரை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் முதல் கூடல்நகர் வானொலி நிலையம் வரை புதிய நான்கு வழி இணைப்புச் சாலை ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத் துறை மற்றும் மதுரை மாநகராட்சிச் சாலைகளை ஒருங்கிணைந்து அமைக்க சட்டசபையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதே போல, பாண்டிக்கோவில் அருகில் மதுரை தொண்டி சாலை, மதுரை சுற்றுச்சாலை சந்திப்பில் ரூபாய் 56 கோடியில் மேம்பாலம் அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் விரைவில் துவங்கப்படும். 

குருவிக்காரன் சாலை முதல் அண்ணாநகர் வரை...
அதோடு, வைகையாற்றின் வடகரையில் குருவிக்காரன் சாலை முதல் அண்ணாநகர் பாலம் வரை சாலை அமைக்க ரூபாய் 16.35 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, இந்தப் பணி விரைவில் துவங்கப்படும்.  ஆகவே, மதுரை மாநகர மக்கள் கண்ட நீண்டகாலக் கனவை அம்மாவினுடைய அரசு இன்றைக்கு நிறைவேற்றி தந்திருக்கிறதுஅதுமட்டுமல்ல, வைகை ஆற்றிலே இன்றைக்கு நீர் செல்கின்ற பொழுது இந்த மாநகரத்தினுடைய கழிவு நீரெல்லாம் அந்த ஆற்றிலே கலக்கக்கூடிய சூழ்நிலை இருக்கின்றது. ஆகவே, நீர் மாசு படுகின்றது. அதைத் தடுப்பதற்காக ஆங்காங்கே சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, வருகின்ற கழிவுநீரை சுத்திகரித்து ஆற்றில் விடுவதற்குண்டான சூழ்நிலையை அம்மாவினுடைய அரசால் உருவாக்கித் தரப்படும்.  அம்மாவினுடைய அரசு இன்றைக்கு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது. கல்வி, வேளாண்மை, சாலை வசதி, பொதுப்பணித் துறைப் பணிகள் என அனைத்துத் துறைகளுமே வளர்ச்சி காணுகின்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே. ராஜூ, பாஸ்கரன், கோபாலகிருஷ்ணன் எம்.பி. வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., கலெக்டர் வீரராகவராவ் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து