முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அ.தி.மு.க. அரசின் திட்டங்கள்: முதல்வர் பட்டியல்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அ.தி.மு.க.அரசின் திட்டங்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பட்டியலிட்டார்.

விருதுநகரில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மேலும் பேசியதாவது,
விருதுநகர் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ வசதியை மேம்படுத்த சுகாதாரத் துறையில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகின்றது.   18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விருதுநகர் மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் தாய்சேய் நலப்பிரிவு கட்டுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  மேலும், இம்மாவட்டதில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு பணிகள் நடைபெற்று முடிவுறும் தருவாயில் உள்ளன. இம்மாவட்டத்தில் ஒரு கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 50 மெட்ரிக் டன் கால்நடை தீவன தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறையின் மூலம் அருப்புக்கோட்டையில் அரசு தொழிற் பயிற்சி கட்டிடம் 2 கோடி ரூபாயில் கட்டப்பட்டு திறக்கும் தருவாயில் உள்ளது. கால்நடைத் துறையில் சார்பில்  மீனாட்சிபுரம், நல்லமங்கலம் போன்ற பல்வேறு இடங்களில் 2 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை மருந்தக கட்டிடங்கள் கட்டப்பட்டு திறக்கும் தருவாயில் உள்ளன.354 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவில் திருத்தங்கல், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய நகராட்சிப் பகுதிகளுக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குட்டி ஜப்பான் என அழைக்கப்படும்  சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.  இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனையை தடை செய்ய வேண்டும்  என்று  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) விதிகள் 1986ன் பிரிவு 3(பி)ல் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளிலிருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசை  அம்மாவின் அரசு வலியுறுத்தி வருகிறது. பெருந்தலைவர் காமராசர் ஓர் ஏழைப் பங்காளர், அதிகமாக பள்ளிகளை கிராமந்தோறும் திறந்த காரணத்தினால்தான், கிராமத்திலே பிறந்தவர்கள் அறிவு ஜீவியாக, பல்வேறு பதவிக்கு உயர்ந்த நிலைக்கு வருவதற்குக் காரணம் அடித்தளமாக திகழ்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர். நானும் கிராமத்திலே பயின்றவன், அந்த சிறப்புக்கு உரியவர்களின் நானும் ஒருவன். பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த காலத்திலே கல்விக்கு முன்னுரிமை கொடுத்து, குறிப்பாக கிராமத்திலே வாழ்கின்ற ஏழை, எளிய, நடுத்தர மாணவர்கள் கிராமத்திலே படிப்பதன் மூலமாக கல்வி அறிவு பெறுவதற்கு அவர் உருவாக்கித் தந்த பள்ளிகளில்தான் இன்றைக்கு மேடையிலே வீற்றிருக்கின்ற அத்தனை பேரையும் உருவாக்கியது என்று சொன்னால், அதன் பெருமைக்குரியவர் பெருந்தலைவர் காமராஜர்தான். ஏனென்றால், அந்த சிந்தனை அவரிடத்திலே இருந்தது, அதை நனவாக்கியவரும் அவர்தான். அதுமட்டுமல்ல, என்னுடைய பகுதியைப் பொறுத்தவரைக்கும், கிட்டத்தட்ட 10 சதவிகிதம் நாடார் சமுதாயத்திலே இருக்கின்றார்கள். அதிலே 80 சதவிகிதம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்கக்கூடியவர்கள்.

அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, ஒருவரை ஒன்றியப் பெருந்தலைவர் என்று ஒருவரை குறிப்பிட்டதற்கு, உடனடியாக அம்மா இடைமறித்து, பெருந்தலைவர் என்று சொல்லாதே, ஒன்றிய குழுத்தலைவர் என்று சொல், பெருந்தலைவர் என்று சொன்னால், கர்மவீரர் காமராஜர் ஒருவருக்குத்தான் அந்த பெயர் உண்டு என்று சொன்னார். அப்படி  அம்மா, பெருந்தலைவர் காமராஜரிடம் மிகுந்த மரியாதையை வைத்திருந்தார். ஏனென்றால் இந்த நாட்டிற்கு உழைத்தவர், தேசபக்தி கொண்டவர், எளிமையாக வாழ்ந்தவர், மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர் பெருந்தலைவர் காமராஜர் . இந்த மண்ணிலே எத்தனையோ பேர் பிறக்கின்றார்கள், வாழ்கின்றார்கள், இறக்கின்றார்கள், ஆனால், பிறந்த ஒருவர், தான் இறக்கின்றவரை இடைப்பட்ட காலத்திலே இந்த நாட்டு மக்களுக்கு என்ன செய்தார் என்பதைத்தான் மக்கள் சிந்திப்பார்கள். அந்த சாதனையை படைத்தவர் நம்முடைய கர்மவீரர் காமராஜர் . இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து