முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதாரணத் தொண்டனாக பொது வாழ்வை தொடங்கி நாட்டுப்பணியையே உயிர் மூச்சாக கொண்டவர் கர்மவீரர் காமராஜர் விருதுநகர் விழாவில் முதல்வர் எடப்பாடி புகழாரம்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

விருதுநகர்: சாதாரண தொண்டனாக பொதுவாழ்வை தொடங்கி நாட்டுப்பணியையே உயிர்மூச்சாக கொண்டவர் கர்மவீரர் காமராஜர் என்று விருதுநகரில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார்.

விருதுநகரில் காமராஜர் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
115 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் குமாரசாமி - சிவகாமி அம்மையார் தம்பதிக்கு மகனாக பிறந்த ஒரு சிறுவன், தன்னுடைய தந்தையின் மறைவுக்குப் பிறகு பள்ளிக்கு செல்ல முடியாமல், தாய்மாமன் கருப்பையா நாடாரின் துணிக் கடைக்குப் போக வேண்டிய சூழ்நிலையிலும், தவறாது ஞானம்பிள்ளையின் பொடிக் கடைக்கு பத்திரிகைகளை படிப்பதற்காகவே போவான்.  அங்கு வரும் பத்திரிகைகளை ஆர்வத்துடன் படிப்பான், அரசியல் பற்றி மற்றவர்களுடன் விவாதிப்பான். இந்த சிறுவனுக்கு அரசியல் அக்கறை வேண்டாமென்று அவரது பாட்டி கூறுவார். அதற்கு அந்த மாணவன், நான் ஒன்று சொல்லுகிறேன் பாட்டி. நம்ம எண்ணெய் கடை பெரியசாமி அண்ணாச்சி வீட்டில் இருக்கிற நாய் மிகவும் அழகாக இருக்கிறது. ஆனால் அந்த நாய் நம் வீட்டிற்குள் நுழைந்தால் முதலில் விரட்டுபவர்களே நீங்கள்தான் பாட்டி,  அதே மாதிரிதான் வெள்ளைக்காரன். நம்ம நாட்டிலே அவனுக்கு என்ன வேலை? அதிகாரம் செய்கிறான். அதைக் கண்டிக்காமல் எப்படி விடுவது பாட்டி? என்றான் அந்த சிறுவன்.  அச்சிறுவன் தான் பிற்காலத்தில் நாட்டிற்கும், தமிழகத்திற்கும்  பெருமை சேர்த்த பெருந்தலைவர் காமராசர்.

மகாத்மா காந்தியின் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்த சுதந்திரப் போராட்டம் பற்றி பத்திரிகையின்  மூலமும், விருதுநகரில் உள்ள பம்பாய் அண்ணாச்சி என்றழைக்கப்பட்ட கோவிந்த நாடாரின் மூலமும் தெரிந்து கொண்டார். இதனால் நாட்டின் மீதும், தேசியத் தலைவர்கள் மீதும், பற்றும் பக்தியும் ஏற்பட்டது. இதன் மூலம் மகாத்மா காந்திஜியின் மானசீக தொண்டனாகவே மாறினார்.  இதன் விளைவாக தனது 16-வது வயதில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தபின், தீரர் சத்தியமூர்த்தி அவர்களை தனது அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார்.  1930-ம் ஆண்டு நடைபெற்ற உப்புசத்தியாகிரக போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்றார். பின்னர் வெள்ளையனே வெளியேறு போராட்டம் போன்ற பல்வேறு சுதந்திரப் போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றார். அவர் தனது இளமைக் காலத்தில் 9 ஆண்டுகளை சிறையிலேயே கழித்து, தனது வாழ்வை நாட்டுக்காகவே அர்ப்பணித்தார்.

இவர் 1936-ம் ஆண்டு  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்  செயலாளர் ஆனார். பின்னர் 1940-ம் ஆண்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  1954-ம் ஆண்டு வரை அந்த பொறுப்பினை வகித்தார். 1940-ம் ஆண்டு விருதுநகர் நகராட்சிக்கு நடந்த தேர்தலில், காமராசர் சிறையில் இருந்து கொண்டே வெற்றி பெற்றார். பின்னர் 1941-ம் ஆண்டு அந்த நகராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளிவந்த பின் நகராட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னும் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபடுவதில் அவருடைய நாட்டம் இருந்ததால், அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். இவர் முதன்முதலில் 1937-ம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மீண்டும் 1946-ம் ஆண்டில் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன் பின்னர்  1952-ம் ஆண்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ம் நாள் தமிழ்புத்தாண்டில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார். 1954-ம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற சமயம் அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.  அவரது நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொகுதியில் உள்ள யாரையும் பதவி விலகச் சொல்லாமல்,  அப்போது காலியாக இருந்த குடியாத்தம் சட்டமன்ற தொகுதியிலிருந்து போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1957 மற்றும் 1962-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தல்களில், சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். காமராசர் அவர்கள் 1954 முதல் 1963 வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக 9 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர், அக்டோபர் 1963 முதல் 1967-ம் ஆண்டு வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்தார். 1969 மற்றும் 1971 -ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சாதாரணத் தொண்டனாக பொது வாழ்வைத் தொடங்கி, நாட்டுப்பணியையே தனது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்து, பின்னர் காங்கிரஸ் கட்சியின்  தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அரசியலில் ஒரு தனிப்பெரும் சக்தியாக திகழ்ந்தவர் கர்மவீரர் காமராஜர். கல்வித்துறையில் ஒரு நூற்றாண்டில் ஏற்பட  வேண்டிய வளர்ச்சியை முதலமைச்சர் காமராசர் ஒன்பது ஆண்டுகளில் சாதித்துக் காட்டினார். தனது ஆட்சிக் காலத்தில் பள்ளிகளின் எண்ணிக்கையை பன்மடங்காக உயர்த்தி, தமிழ்நாட்டில் கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர் அவர். கிராமப்புற மாணவ, மாணவிகள் கல்வியறிவு பெற,  வறுமை பெரிய தடையாக இருப்பதைத் தமது அனுபவம் மூலம் பெருந்தலைவர் காமராஜர் உணர்ந்தார். மாணவர்களுக்குப் பள்ளியிலேயே, ஒருவேளை உணவு அளித்தால், அதிகமான  பிள்ளைகள் கல்வி கற்க முன்வருவார்கள். அதன்மூலம், படிப்பறிவு பெறுவோரின்  எண்ணிக்கையை உயர்த்தலாம்.  அது சமுதாய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்  என்ற எண்ணத்தில்,உதித்ததுதான் மதிய உணவுத் திட்டம். எல்லா ஏழைப் பிள்ளைகளும் இலவச கல்வியை பெற வேண்டும்.  அவர்கள் முன்னேற வேண்டும் என்பதில்  பெருந்தலைவர் அக்கறை காட்டினார். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து