முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமராஜ் கொண்டு வந்த திட்டங்களை அ.தி.மு.க. அரசு பலவகைகளிலும் மெருகேற்றி செயல்படுத்தி வருகிறது விருதுநகரில் முதல்வர் எடப்பாடி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

விருதுநகர்: பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த திட்டங்களை அ.தி.மு.க. அரசு பலவகைகளிலும் மெருகேற்றி செயல்படுத்தி வருகிறது என்று விருதுநகரில் நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

விருதுநகரில் நடந்த காமராஜர் பிறந்த தின விழாவில் முதல்வர் எடப்பாடி மேலும் பேசியதாவது,
பசியை மட்டும் விரட்டினால் போதாது, அவர்கள் சத்தானவர்களாகவும் வளர வேண்டும் என்ற எண்ணத்தில் காமராஜரின் மதிய உணவு திட்டத்தினை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டமாக மாற்றினார்.  வெறும் சத்துணவுடன் நில்லாமல், இளைய தலைமுறையினருக்கு அனைத்து வகையான சத்துகளும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மா, தினமும் சூடான கலவை சாதத்துடன் பயறு வகைகள் மற்றும் உருளைக் கிழங்கு ஆகியவற்றையும் வழங்கி பெருந்தலைவரின் திட்டத்தை மேலும் மெருகேற்றினார்.  இவ்வாறு பெருந்தலைவர் கொண்டு வந்த திட்டத்தை அ.தி.மு.க. அரசு பலவகைகளிலும் மெருகேற்றி செயல்படுத்தி வருகிறது. அதை தொடர்ந்து அம்மாவின் அரசு, அனைவருக்கும் தரமான கல்வியை அளிப்பதற்கு உறுதி பூண்டுள்ளது.  அதனை நிறைவேற்றும் வகையில், 2018-19-ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், எத்தனையோ துறைகள் தமிழகத்தில் இருந்தாலும், அனைத்துத் துறைகளைக் காட்டிலும்  பள்ளிக் கல்வித் துறைக்கு மிக அதிக அளவு ஒதுக்கீடாக 27ஆயிரத்து 205 கோடியே  88 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதே இதற்கு சான்றாகும். 

தேர்வு தேதிகள் முன்கூட்டியே அறிவிப்பு
மிகத் தெளிவான திட்டமிடலின் காரணமாக 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு  நடைபெறும் தேதிகளும், இந்த வகுப்புகளுக்குரிய பொதுத் தேர்வு முடிவு அறிவிக்கப்படும் தேதிகளும் கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே கொடுக்கப்பட்டதன் காரணமாக மாணவர்களின் மன அழுத்தம் குறைக்கப்பட்டுள்ளது. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் மாணவ, மாணவியர்களுக்கான பல திட்டங்கள் அம்மா வழியில் செயல்படும் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்களுக்கு படிப்பிற்கு தேவையான விலையில்லா சீருடை,  காலணி இடைநிற்றலை குறைத்திட சிறப்பு ஊக்கத் தொகை,  விலையில்லா மடிக்கணினிகள், விலையில்லா மிதிவண்டி, கட்டணமில்லா பேருந்து பயண அட்டை, என அனைத்தும் அம்மா வழியில் செயல்படும் அரசால் தொடர்ந்து மாணவர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்டு வருகின்றன.  

சாதனை படைத்த அரசு
இந்தத் திட்டங்களுக்காக 2018-19-ம் ஆண்டில் ஆயிரத்து 967 கோடியே 47 லட்சம்  ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்மா வழியில் செயல்படும் அரசால் பொதுத் தேர்வுகளில் அறிவிக்கும் தரமுறை கைவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மாணாக்கர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும்  மன அழுத்தத்தைக் குறைத்து மனநிம்மதியை அளித்துள்ளது. 2017-18-ம் கல்வியாண்டு முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 20 லட்சம் மாணவர்களுக்கு அவர்களுடைய கைபேசி மூலமாக தேர்வு முடிவுகள் வெளியான 2 நிமிடத்தில் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டு சாதனை படைத்த அரசு அம்மாவினுடைய அரசு. மதிப்பெண் சான்றிதழ்களில் மாணவர்களின் பெயர் தமிழில் அச்சிட்டு வழங்கும் முறை மார்ச் 2017 பொதுத் தேர்வு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இவ்வாறு தமிழக கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் சிறந்த திட்டங்களில் ஒரு சிலவற்றை மற்ற மாநிலங்களில் உள்ள கல்வித் துறை, தங்கள் மாநிலங்களிலும் செயல்படுத்தி வருகின்றன.  கர்ம வீரர் காமராஜர் பள்ளிக்கல்விக்கு எவ்வாறு ஊக்கம் அளித்தார்களோ, அது போல்  அம்மாவின் அரசு உயர் கல்வித்துறைக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. 2011-ம் ஆண்டு அம்மா ஆட்சி பொறுப்பேற்ற போது, உயர்கல்வி படித்திருந்த மாணவர்களின் சதவீதம்  21. இன்றைய தினம் தமிழகத்தில் 46.94 சதவித மாணவர்கள் உயர்கல்வி படிக்கின்றனர். இதன் காரணமாக இந்தியாவிலேயே உயர்கல்வி படிக்கின்ற மாணவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 

காமராஜரின் கனவு நிறைவேறியது
பெருந்தலைவர் காமராஜர் கண்ட கனவு அம்மாவினுடைய அரசால் இன்றைக்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது.  இதற்கு காரணம், அம்மா உயர் கல்விக்கு அளித்த ஊக்கமும், 65 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கியதும் தான். அம்மாவின் வழியில் செயல்படும் இந்த அரசு கடந்த ஆண்டு, மேலும் 11 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை  தொடங்கியுள்ளது.  ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, கடைக்கோடியில் இருக்கின்ற ஏழை மாணவ, மாணவியரும் குறைந்த கட்டணத்தில் கல்வியறிவு பெறுவதற்காக, உயர்கல்வி படிப்பதற்காக, இன்றைக்கு 2011-லிருந்து இன்று வரைக்கும் ஆகமொத்தம் 76 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை  கொடுத்த அரசு அம்மாவினுடைய அரசு. 1961-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் பொது நூலகச் சட்டத்தை இயற்றி, 454 கிளை நூலகங்களையும், எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட மைய நூலகங்களையும் ஏற்படுத்தினார். இப்படிப்பட்ட  மக்கள் திட்டங்களால் தான்.

அணைகளை கட்டிய கர்மவீரர்
காமராஜர் ஆட்சி என்னும் சொற்றொடர் இந்திய அரசியல் சொல்லகராதியில் இடம்பெற்றன. விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளித்து உணவு உற்பத்தியைப் பெருக்க ஆறுகளின் குறுக்கே பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் பல்வேறு அணைகளை கட்டப்பட்டது. பரம்பிக்குளம் - ஆழியார் திட்டம், கீழ்பவானி  -  நீர்த் தேக்கத் திட்டம், அமராவதி - அணைக்கட்டுத்திட்டம்,  சாத்தனூர் - நீர்த்தேக்கத் திட்டம், வைகை - அணைக்கட்டுத் திட்டம், மணிமுத்தாறு   - உயர்மட்ட கால்வாய் திட்டம்  இப்படி பல அணைகளை கட்டி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள். தற்காலம் அறிவியல் காலம். இதற்கு அடிப்படை தேவை மின்சக்திதான்.

இந்த மின்சக்தியை பெருக்காமல் தொழில் வளர்ச்சிகாண முடியாது என்பதை நன்கு அறிந்து பல மின் திட்டங்களை பெருந்தலைவர் செயல்படுத்தினார். அதே போல், அம்மா  2011-ல் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்ற போது  ஒரு நாளைக்கு 10 மணி நேரம், 15 மணி நேரம் மின்தடை இருந்தது.  இன்னும் 3 ஆண்டுகளில் தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றுவேன் என்று அம்மா சூளுரைத்தார், சொன்னதை நிறைவேற்றினார். அம்மா அவர்கள் வழியில் இன்றும் ஆளுகின்ற நம்முடைய அரசால் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக திகழ்கிறது. 

காமராஜர்.ஆட்சிக் காலத்தில் தமிழ் நாட்டில் தொழில் புரட்சி ஏற்பட்டது. அதேபோல் அம்மா முதலீட்டாளார்களை ஈர்க்கும் வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தினார். அம்மாவின் வழியில் வரும் 2019-ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு அம்மா அரசால் மீண்டும் நடத்தப்படவுள்ளது. 

பெருந்தலைவரின் அத்தனை பண்பு நலன்களையும் கைக்கொள்ள முடியாவிட்டாலும், அவற்றில் ஒரு சிலவற்றையாவது இன்று அரசியலுக்கு வர விரும்புவோர் பின்பற்ற வேண்டும் என்பதே அவரது வாழ்க்கை நமக்கு சுட்டிக் காட்டுகின்ற உண்மையாகும். சென்னையில் உள்ள கர்மவீரர் காமராசர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக 21.6.1978 முதல் தமிழ்நாடு அரசு பராமரித்து வருகிறது.  இதற்கான உத்தரவினை அன்றைய முதலமைச்சர்   எம்.ஜி.ஆர். பிறப்பித்தார். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து