முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணை நீர் மட்டம் 100 அடியை எட்டியது

செவ்வாய்க்கிழமை, 17 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் கடந்த ஒரு மாதமாக பலத்த மழை கொட்டி வருகிறது. கர்நாடகாவில் கடந்த மாதம் தென் மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே கனமழை கொட்டித்தீர்ப்பதால் அங்குள்ள அணைகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது. நேற்று முன்தினம் வரை 90 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 95 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது.நேற்று பிற்பகலில் 96 அடியை தாண்டியது. ஒரே நாளில் அணையின் நீர் மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது. நீர்மட்டம் நேற்று இரவு 100 அடியை எட்டியது. கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த ஆண்டு மேட்டூர் அணை நிரம்பும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் நாளை பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். இதற்காக சம்பா சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் உரங்களை இருப்பு வைக்கவும் அவர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடைபெறும் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் செல்லவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்பது இதுவே முதல் முறை. இதனிடையே மேட்டூர் அணையில் இருந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறக்கப்படவுள்ளதால் காவிரி பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய டெல்டா மாவட்ட பகுதிகளில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து