முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டீசல் விலை உயர்வால் பஸ் கட்டணம் உயராது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திட்டவட்ட அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 17 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : டீசல் விலை உயர்வு காரணமாக பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வுக்கு பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டி வருமாறு:-

விரிவாக ஆய்வு

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள 515 புதிய பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வசதிகள் பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இப்பேருந்துகளை முறையாக பராமரிப்பது, போக்குவரத்துக் கழகத்தின் தொழிலாளர்கள் பிரச்னைகளை தீர்ப்பது, பேருந்து கட்டண உயர்வுக்கு பின்னர் அதிக அளவில் டீசல் விலை உயர்ந்துள்ளதால், போக்குவரத்துக் கழகங்களில் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்வது, வருவாயை பெருக்குவது, பயணத்தின் போது பயணிகள் பாதுகாப்பினை உறுதி செய்வது, கட்டண உயர்வின் காரணமாக குறைந்துள்ள பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது, போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட 21 அறிவிப்புகளையும் விரைவாக செயல்படுத்துவது, விபத்தில்லா ஓட்டுநர்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

நல்ல வரவேற்பு...

மக்கள் அதிக அளவில் பயணம் செய்கின்ற வழித்தடங்களில் புதிய விரைவு பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயண நேரத்தை குறைப்பது, பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாக செல்வதே இதன் நோக்கம். குறிப்பாக திருவண்ணாமலை - சென்னை பயண நேரம் 1.15 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளது. வருவாயும் அதிகரித்துள்ளது. கரூர் - கோவை செல்ல சாதாரண பேருந்துகளில் 3.30 நிமிடமாக இருந்தது 2.30 நிமிடமாக குறைந்துள்ளது. இச்சேவை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. மேலும் இந்த சேவையானது பிற ஊர்களிலும் படிப்படியாக விரிவுப்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக, பொது மக்கள் தனியார் மற்றும் தமது சொந்த வாகனங்களை தவிர்த்து அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை அதிகமாக பயன்படுத்திடும் நிலை உருவாகும். இதனால் இழந்துள்ள பயணிகளின் எண்ணிக்கை சரி செய்யப்படும்.

எதுவும் இல்லை...

டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்., கட்டணம் உயர்த்துவது குறித்து திட்டம் எதுவும் இல்லை. நிதிச் சுமை மற்றும்தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்கள் ஆகியவற்றிற்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி முதல்வரையும், துணை முதல்வரையும் நானும், போக்குவரத்து துறை செயலாளரும் சந்தித்து தெரிவித்துள்ளோம். விரைவில் ஆவண செய்வதாக தெரிவித்துள்ளார்கள்.

ரூ.3,685 கோடி...

பொது மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு அரசின் சார்பில் இந்திய அளவில்இயங்கும் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களும் இலாபத்தில் இயங்குவதில்லை. ஒரு சிலதனியார் பேருந்துகள் குறிப்பிட்ட வழித்தடங்களில் இயங்குவதன் மூலம் லாபம் ஈட்டுகின்றன. முற்றிலும் பொது மக்களின் சேவையை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் இயங்கி வருவதால் நஷ்டம் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் நஷ்டத்தை அரசு தான் வழங்குகிறது. குறிப்பாக தி.மு.க வின் 5 ஆண்டு கால ஆட்சி காலத்தில் 3,685 கோடி ரூபாய் மட்டுமே போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசால் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.1000 கோடி...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் தமிழ்நாடு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரால் 7 ஆண்டுகளில் 12,580 கோடி ரூபாய் அரசால் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 60,000 போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான நிலுவையில் இருந்த அனைத்து பணப்பலன்கள் ஏறத்தாழ 1500 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழக வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவிற்கு ஊதிய உயர்வினை வழங்கி உள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகங்களில் 22 லட்சம் அளவில் பயணிகள் குறைந்துள்ளனர்.

பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாகபேருந்து கட்டண உயர்வின் தாக்கமானது சில மாதங்கள் வரை நீடிக்கும், பண மதிப்பிழப்பு,ஜி.எஸ்.டி. ஆகியவற்றின் காரணமாக தொழில்களில் ஏற்பட்டுள்ள சுணக்கம் மற்றும் தனி நபர்வாகனங்கள் அதிகரிப்பு ஆகிவற்றின் காரணமாகவே இந்த குறைவு. இன்று நடைபெற்றகூட்டத்தில் பல்வேறு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகளில் கடந்த மூன்று மாதகாலத்தில் வெகுவாக முன்னேற்றம் ஏற்பட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.மேலும், இந்த இழப்பினை ஈடு செய்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மின்கலன் வாகனங்கள்

போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கையில் அறிவித்துள்ளவாறு சுற்றுச் சூழலை பாதுகாக்கின்ற வகையில் பேருந்துகள் இயக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையொப்பமிடப்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில், இது போன்ற மின்கலன் வாகனங்கள் அதிக அளவில் இயங்கும். குறிப்பாக சென்னை மாநகரில் எந்தந்தவழித்தடங்களில் இது போன்ற பேருந்துகளை இயக்குவது குறித்து விரிவான கள ஆய்வுமேற்கொள்ளவிருக்கும் இக்குழுவினர் இன்னும் 10 நாட்களில் சென்னை வர உள்ளனர்.அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் வாகனங்கள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும்.

200 பேருந்துகள்....

இது குறித்து நானும், செயலாளரும், மத்திய தரை வழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை டில்லியில் சந்தித்து 200 பேருந்துகள் வேண்டும் என்றுகோரிக்கை வைத்தோம். முதற்கட்டமாக 70 மின்கலன் பேருந்துகள் வாங்குவதற்கான கருத்துருஅனுப்பட்டுள்ளது. ஒரு பேருந்தின் விலையானது 2 கோடி அளவில் இருந்தது தற்போது 1.50கோடியாக குறைந்துள்ளது, மேலும் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக, முதல் மாநிலமாக தமிழ்நாடு தான் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக 160 நகரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இது தமிழக அரசுபோக்குவரத்துக் கழகங்களுக்கு ஒரு வரபிரசாதமாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து